2025 ஜூலை 19, சனிக்கிழமை

இந்தியா- இலங்கை இன்று இருதரப்பு பேச்சு

Editorial   / 2019 நவம்பர் 29 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதுடெல்லியை நேற்று (28) மாலை 6 மணியளவில் சென்றடைந்தார்.

அவரை, புதுடெல்லி விமான நிலையத்தின் வைத்து, மத்திய அமைச்சர் வி. கே . சிங் வரவேற்றார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சிந்துவும் உடனிருந்தார். ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு அங்கு பல்லடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பிரமாண்டமான வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

அதில், ஹிந்தி மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில், வரவேற்பு வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று, தன்னுடைய சிறிய தூதுக்குழுவுடன், கட்டுநாயக்க பண்டாரநாயக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்றுப்பிற்பகல் 2.45 மணியளவில் புறப்பட்டுச் சென்றார். 

விமானத்துக்குச் செல்லும்போது, விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் வழியை பயன்படுத்தாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாதாரண பயணிகள் வழியை பயன்படுத்தியே, விமானத்துக்குச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதியுடன், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ,முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ,திறைசேரியின் செயலாளர் ஆட்டிகல உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

இந்தியாவில் தங்கியிருக்கும் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம் கோவிந்த்,வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்ஷங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரை உத்தியோகபூர்வமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாரென அறியமுடிகின்றது. 

இந்த விஜயத்தில்,  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை மிகமுக்கியமானதாக இருக்குமென அறியமுடிகிறது. அந்தப் பேச்சுவார்த்தை புதுடெல்லியில் இன்று (29) இடம்பெறும். 

தெற்காசிய பாதுகாப்பு, வலய வர்த்தகம், இருதரப்பு உறவுகள், அண்டைய நாடுகளுடனான நல்லுறவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, அதிகூடுதலான கவனம் செலுத்தப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், முதாவது விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ளார். தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, நாளை (30) மாலை நாடுதிரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X