2025 ஜூலை 24, வியாழக்கிழமை

ஐ.நா விசேட அறிக்கையாளரால் இலங்கைக்கு குட்டு

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த, உண்மை, நீதி, இழப்பீடு வழங்கல், மீள இடம்பெறாமலிருப்பதை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான, ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீப், இலங்கை அரசாங்கம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுடன், தனது விஜயத்தை நேற்று (23) நிறைவுசெய்தார்.

இம்மாதம் 10ஆம் திகதி இலங்கையை வந்தடைந்திருந்த அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கேட்டறிந்தார். விஜயத்தின் இறுதி அம்சமாக, கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

“இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னேற்றம் எங்கிருக்க வேண்டுமோ, அவற்றுக்குச் சிறிது கூட அண்மையாக முன்னேற்றங்கள் இல்லை” என்று, அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, அரசாங்கத்தின் “100 நாள் நிகழ்ச்சித்திட்டம்” பற்றித் தனது கவனத்தைச் செலுத்திய அவர், பொறுப்புக்கூறுதல் பற்றிய உறுதிமொழிகள், அதிலேயே கூறப்பட்டிருந்தன என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தையும் ஞாபகமூட்டினார்.

இக்காலத்தில் சில முன்னேற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட, இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல், நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாதச் சந்தேகநபர்கள் மீதான வழக்குகளைத் துரிதப்படுத்துதல், கண்காணிப்பு என்ற பெயரில் அச்சுறுத்துதல் போன்ற விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

கண்காணிப்பு எனும் விடயத்தில், பெண்களுக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் வடக்கிலும் கிழக்கிலும் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் ஈடுபடுபவர்கள், இவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

“மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விடயமும், அடிப்படை உரிமைகள் சம்பந்தமான கேள்விகளை எழுப்புகின்றன. எனவே, அவற்றைத் தீர்ப்பதற்கான விடயத்தில் முன்னேற்றத்தை அடைவதில் பின்னிற்பது, நீதியை மறுப்பதாகும்.

“இந்தப் பின்னடைவுகள், முழுமையான நிலைபேறுகால நீதி நிகழ்ச்சித் திட்டத்தைக் கொண்டு நடத்துவதில், அரசாங்கத்துக் காணப்படும் அர்ப்பணிப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது” என, அவர் இங்கு தெரிவித்தார்.

அத்தோடு, காணி விடுவிக்கும் விடயம் சம்பந்தமாக, தனது முக்கியமான விமர்சனத்தை அவர் முன்வைத்தார். இராணுவத்தினரால் ஆளப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பான விடயத்தில், இராணுவத்தினரே சம்பந்தப்பட்ட ஒரு தரப்பாகவும், நீதிபதியாகவும் உள்ளனர் எனத் தெரிவித்த அவர், எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது என்ற இறுதி முடிவை, இராணுவத்தினரே எடுக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.

“இது, அபிவிருத்தி என்ற நோக்கில், பாரதூரமான விளைவுகளைக் கொண்டிருக்கும். இது, சொத்துரிமையில் பலவீனமான அரசாங்கமொன்றைக் காட்டுகிறது. இது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்” என்று அவர் தெரிவித்தார்.

அத்தோடு, இலங்கையின் நீதித்துறை, மிகவும் அதிகமான வழக்குகளை நிலுவையில் கொண்டிருப்பதோடு, மெதுவாகவும் இயங்கும் நிலையில், ஏற்படக்கூடிய கஷ்டங்கள், மேலும் அதிகரிக்கின்றன என, அவர் தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி, இலங்கையின் பொறுப்புக் கூறுதல், நீதி, இழப்பீடுகள், மீள இடம்பெறாமலிருத்தல் பற்றித் தயாரித்த அறிக்கை, இதை விடச் சிறப்பான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டுமென, அவர் இங்கு குறிப்பிட்டார். அவ்வறிக்கைக்கு, அமைச்சர்களே பகிரங்கமான விமர்சனங்களை முன்வைத்தமையையே, அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

தனது இந்த அறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலும், இறுதிப் போரில் 40,000 பேர் இறந்தார்களா, இல்லையெனில் 8,000 பேர் இறந்தார்களான என, பத்திரிகைகளில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன எனக் குறிப்பிட்ட அவர், மிகவும் அச்சொட்டான முறையில் அவ்வெண்ணிக்கையைக் கூற முடியாது போகலாம் என்ற போதிலும், மரபணுவியல், ஏனைய முறைகள் மூலம், நம்பத்தகுந்த தரவைப் பெறலாம் என அவர் குறிப்பிட்டார்.

நீதி நடவடிக்கைகள், பழிவாங்குதல் நடவடிக்கை போன்று காணப்படுவதில்லை எனவும், ஒட்டுமொத்தமாக அனைவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதியப்படுவதில்லை எனவும் குறிப்பிட்ட அவர், “இவ்விடயத்தில், ‘போர் நாயகர்கள், நீதி விசாரணைகளுக்கு முற்படுத்தப்பட மாட்டார்கள்’ என்ற சொற்றொடர் தொடர்பில், நான் கரிசனை கொள்கிறேன். நிலைபேறுகால நீதிப் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள், வெறுமனே பாதுகாப்புக்குக்கு எதிரான நிகழ்ச்சித்திட்டம் என்ற கருத்தியலைக் கூறுகிறது. அத்தோடு, மனித உரிமைகள் சட்டத்தையோ அல்லது போர்ச் சட்டங்களையோ மீறிய எவரும், நாயகர் என அழைக்கப்பட முடியாது என்பதையும், இக்கருத்துகள் மறந்துவிடுகின்றன” என்று தெரிவித்தார்.

“போர் நாயகர்” என்ற சொற்பிரயோகம், சட்டரீதியாக அமுல்படுத்தப்பட முடியாத, அரசியல் கருத்தாகும் என்று தெரிவித்த அவர், உண்மையான எந்தப் பாதுகாப்பையும் அது வழங்காது என்று குறிப்பிட்டார். “சர்வதேச ரீதியாக, அது எந்தவிதமான உத்தரவாதத்தையும் வழங்காது என்பதைச் சொல்லத்தேவையில்லை. இராணுவப் படைகளின் முன்னாள் உறுப்பினருக்கெதிராக அண்மையில் பிரேஸிலில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு சொல்வதைப் போல, இங்கோ (இலங்கை) அல்லது வெளிநாட்டிலோ, பொறுப்புக்கூறலென்பது கோரப்படும்” என்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளால் வழங்கப்படும் உதவிகளை, இலங்கை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்த அவர், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் வழங்கப்படும் நிபுணத்துவ உதவிகளை, இலங்கை மேலும் பயன்படுத்த முடியுமெனக் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே, நிலைபேறுகால நீதி தொடர்பான மக்களின் நம்பிக்கை அற்றுப் போவதைக் குறைத்து, முன்னேறிச் செல்வதற்கான, பின்வரும் முன்மொழிவுகளை அவர் முன்வைத்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி, சர்வதேச ரீதியான சிறப்பான தன்மைகளைக் கொண்ட சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காணப்படும் வழக்குகளை, விரைவாக நடத்த வேண்டும். அத்தோடு, சந்தேகநபர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரமே கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் விடயத்தில், நீதி மீளாய்வு நடத்தப்பட வேண்டும்.

வர்த்தக நடவடிக்கைகளில் இராணுவத்தின் பங்களிப்பைக் குறைப்பதோடு, வடக்கு, கிழக்கு போன்ற இவ்விடங்களில், இராணுவம் நிலைகொண்டிருப்பதைக் குறைத்தல்.

இராணுவத்தால் பயன்படுத்தப்படும் காணிகள் தொடர்பில், முழுமையான அளவீடு காணப்பட வேண்டும்.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஏனைய சமூகச் செயற்பாட்டாளர்கள் - குறிப்பாக பெண்கள் - மீது தொடரும் துன்புறுத்தலையும் கண்காணிப்பையும் நிறுத்த வேண்டும்.

அதேபோன்று, காணாமல் போனோருக்கான அலுவலகத்தை உடனடியாகச் செயற்படுத்துதல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அவசியம், இழப்பீடு வழங்குவதற்கான காத்திரமான நடவடிக்கைகள், காணிகளை விடுவித்தல், நினைவேந்தலுக்கான அனுமதி போன்ற விடயங்களையும், அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .