Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஜூலை 11 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.மகா, எஸ்.ஜெகநாதன்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துன்னாலையைச் சேர்ந்த இளைஞனொருவன் பலியாகியமையைத் தொடர்ந்து, துன்னாலைப் பகுதியில் நேற்றும் (10) பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து, அங்கு டயர்கள் போட்டு எரிக்கப்பட்டதுடன், எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
6ஆம் கட்டை மணற்காட்டுப் பகுதியில், அனுமதியற்ற முறையில், மணலை கன்ரர் ரக வாகனத்தில், ஞாயிற்றுக்கிழமை ஏற்றிச் சென்றபோது, பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த வாகனம் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்தே, பொலிஸாரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த, சம்பவத்தினால், 24 வயதான யோகராசா தினேஸ் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அவர், கடந்த 10 நாட்களுக்கு முன்னர்தான், வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் இளைஞனொருவன் பலியாகிவிட்டதாகவும், கேள்வியுற்ற, அந்த இளைஞனின் உறவினர்களும் பிரதேசவாசிகளும், ஞாயிற்றுக்கிழமை இரவே, எதிர்ப்பைக் காட்டினர். தொடர்ச்சியாக, நேற்றும், பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்பவத்தில் பலியான, இளைஞனின் சொந்த ஊரான, துன்னாலை வேம்படிச் சந்தி, கலிகைச் சந்தி ஆகிய இடங்களில் டயர்கள் போடப்பட்டு எரிக்கப்பட்டன. ஆகையால், அப்பகுதியில் கோக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. பொது போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பஸ்கள், அரசடியூடாகவே பயணித்தன.
இந்நிலையில்,, பருத்தித்துறையிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றின் பின்புறக் கண்ணாடி, யாக்கரைச் சந்திக்கு அருகில் வைத்து, நொறுக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்தில் மறைந்திருந்த, கறுத்த முகமூடி அணிந்த இளைஞர்கள் இருவர், இரும்புக் கம்பியால், அந்த பஸ்ஸின் கண்ணாடியை தாக்கிச் சேதப்படுத்தியதாக அறியமுடிகின்றது.
இதுதவிர, டயர்களைப் போட்டு எரித்த இளைஞர்களை, துன்னாலைப் பக்கம் நோக்கி துரத்திச் சென்ற இராணுவக் கவச வாகனத்தின் மீது ஏறிய இளைஞர்கள், அதன் கண்ணாடிகளை சேதப்படுத்திய நிலையில், கவச வாகனத்தை அவ்விடத்திலேயே கைவிட்டுவிட்டு இராணுவத்தினர் ஓடிவிட்டனர் என்றும் அறியமுடிகின்றது.
பலியான இளைஞனின் இடமான துன்னாலைப் பகுதி நேற்றையதினம் கொதிகளமாகக் காணப்பட்டது. நிலையில், அவ்விடத்துக்குள் பொலிஸார் செல்ல முடியாத நிலையே காணப்பட்டது.
பொலிஸார் உட்செல்லும் பட்சத்தில், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில், மோதல் வெடிக்கலாம் என அச்சமான நிலைமையே நேற்றுமாலை வரையிலும் நிலவியது.
இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸாருடையை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு, சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். குறித்த பொலிஸ் நிலையத்தின் ஜீப், மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைத்து சேதமாக்கப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையம் தாக்கப்படும் என்ற அச்சத்திலேயே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இருவர் கைது
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், பொலிஸார் இருவர் ஞாயிற்றுக்கிழமை இரவே, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவ்விருவரும் , பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கந்தசாமி நளினியின் முன்னால் நேற்று (10) ஆஜர்படுத்தப்பட்டபோது, அவ்விருவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அவ்விருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், அநுராதபுரம் சிறைச்சாலைக்கு, அனுப்பப்பட்டுள்ளனர்.
உப-பொலிஸ் பரிசோகர் சிவராசா சஞ்ஜீவன் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் அபுதாரி மொஹமட் முபாரக் ஆகிய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவதற்காக சிறப்பு பொலிஸ் குழுவொன்று பருத்தித்துறைக்கு அனுப்பிவைக்க ப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago