2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘சம்பந்தனினதும் மாவையினதும் குடியுரிமையை பறிக்குக’

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, தேசத்ரோகக் குற்றத்துக்காக அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

அறிக்கையொன்றை நேற்று (05) வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மிகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார்.

அத்தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை, தமிழரசுக் கட்சி துஷ்பிரயோகம் செய்தது எனக் குற்றஞ்சாட்டிய அவர், தமிழ் மக்களின் தேசியத் தலைமை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என, தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர் எனவும் ஞாபகமூட்டினார்.

அத்தேர்தலில், இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமோக வெற்றிபெற்றதைச் சுட்டிக்காட்டிய ஆனந்தசங்கரி, “அவர்களின் வெற்றிக்கு, ஓர் அமைப்பின் போராளிகள் பல்லாயிரக்கணக்கானோர், 100 வாகனங்களையும் உபயோகித்து உதவினர். அவற்றில் 50 சதவீத வாகனங்கள், இலக்கத்தகடு இல்லாதவையாகும். வாக்குரிமையற்ற  பல பாடசாலை மாணவ, மாணவியர், தமக்குக் கிடைத்த ஐஸ்கிறீமுக்காக, ஆள்மாறாட்டம் செய்து வாக்களித்திருந்தனர்” என்று குற்றஞ்சாட்டினார்.

விஜயகலா மகேஸ்வரனின் உரை, சர்ச்சைக்குரியது என்பதை ஆனந்தசங்கரி ஏற்றுக்கொண்டாலும், அவரின் உரை, பாச உணர்வால் உந்தப்பட்டது எனத் தெரிவித்த அவர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராகவும் விஜயகலா காணப்பட்ட நிலையில், 6 வயதுச் சிறுமியின் படுகொலையைத் தொடர்ந்தே, அவ்வுரையை ஆற்றினார் எனவும் குறிப்பிட்டார்.

விஜயகலாவின் நடவடிக்கை, “ஒரு நெத்தலியையொத்தது” எனக் குறிப்பிட்டதோடு, இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர், திமிலங்களை ஒத்தவர்கள் எனவும், 2004ஆம் ஆண்டு முதல் இன்று வரை, அவர்கள் என்ற செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் இறைமை பற்றிச் சத்தியப்பிரமாணம் எடுத்தபின்பு, விஜயகலா செய்தமை தவறு என்றால், தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்றும் ஏகப் பிரதிநிதிகள் என்றும் விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொண்டு, தேர்தலில் வெற்றியும் அடைந்த பின்பு, நாட்டின் இறைமையை ஏற்று, இரா. சம்பந்னும் மாவை சேனாதிராஜாவும், எவ்வாறு தொடர்ந்து இருக்கின்றனர் எனவும் கேள்வியெழுப்பினார்.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை, காலங்கடந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களின் ஆசனங்களைப் பறிக்க வேண்டும் எனக் கோரிய ஆனந்தசங்கரி, அவர்களிருவரின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் தேசத்துரோகக் குற்றத்துக்காக விசாரிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X