Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Nirshan Ramanujam / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்றத்தில் இன்று (30) ஆரம்பமானது.
‘காணி உரிமை இல்லை’
“நாட்டில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கு, தற்போதே தீர்வு காணபோகின்றீர்களா, அல்லது உங்களுடைய குழந்தைகளுக்கும் விட்டுச்செல்ல போகின்றீர்களா?”எனக் கேள்வியெழுப்பிய சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, வடக்கு, கிழக்குக்குக் காணியுரிமை வழங்கப்படாது என்றார்.
விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றம் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில், இலங்கையில் அரசமைப்புகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களும் பங்கேற்றிருக்கவில்லை. முதல் தடவையாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சட்டவாக்கத்தை மேற்கொள்ள முனைந்துள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த நாட்டில் மொழிப் பிரச்சினையே தனிநாடு கோரிக்கைவரை சென்றது. இந்தத் தவறை திருத்திக்கொள்ள இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன”. இலங்கையில் 30 சதவீதம் தமிழ் பேசும் மக்களும் 70சதவீதம் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். தேசியப் பிரச்சினைகளை தீர்த்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். இடைக்கால அறிக்கை ஓர் இறுதிப்படுத்தப்பட்ட அரசமைப்பு அல்ல. சில ஊடகங்கள் இதனை இறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் 13ஆவது திருத்தச்சாட்டத்தை தாண்டி அதிகாரப் பகிர்வை வழங்குவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு வாக்குறுதியளித்திருந்தார். இந்தியாவை எதிர்த்து யுத்தத்தை கொண்டு செல்ல முடியாது என்பதன் அடிப்படையிலேயே மஹிந்த இவ்வாறு வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், இன்று அவர் புதிய அரசமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்” என்றார்.
“வரலாற்றில் இரண்டு கட்சிகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசிய பிரச்சினைக்கான தீர்வை எதிர்த்தே வந்தன. அதனை நாங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தற்போது அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து தீர்வுகாணும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. புதிய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை அவ்வாறே பேணப்படும். நாமும் பௌத்தர்கள்தான். பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நாங்கள் ஒருபோதும் நீக்க மாட்டோம். அரசமைப்பு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். ஒற்றையாட்சியின் கீழ் ஒருமித்த பிளவுப்படாத நாட்டுக்குள் அதிக பட்ச அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே அரசின் நோக்கமாக உள்ளது”என்றார்.
“மொழிப் பிரச்சினைக்கே தமிழர்கள் தீர்வைக் கோரியிருந்தனர். அதில் இருந்துதான் காலத்துக்கு காலம் இந்தப் பிரச்சினை தோற்றம் பெற்றது. தனிநாடு கோரிக்கை வரை தேசிய இனப்பிரச்சினை வலுப்பெற்றிருந்தது. தமிழர்கள் விடயத்தில் நாம் தவறிழைத்துள்ளோம். அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
“தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் போதுதான் இலங்கையின் தனித்துவம் பாதுகாக்கப்படும். இன,மதங்களை கடந்து இலங்கையர்களின் தனித்துவத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
‘மகாநாயக்கர்களே அஞ்சாதீர்’
“எங்களை மீறி, அரசமைப்பில் எவ்விதமான மாற்றங்களையும் செய்யமுடியாது. நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் ஷரத்துகளை சேர்க்கவோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை மாற்றவோ முடியாது. ஆகையால், புதிய அரசமைப்புத் தொடர்பில், மகாநாயக்க தேரர்கள் அஞ்சவேண்டாம்” என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
“வழிநடத்தல் குழுவில், நாங்கள் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதற்கெல்லாம் தலையசைத்து ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கவும் இல்லை. எங்களுடைய யோசனையையும் முன்வைத்துள்ளோம்” என்றார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது“ என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
“பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாது. ஆகையால், மகாநாயக்கர்களே அஞ்சாதீர்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அன்று கொண்டிருந்த நிலைப்பாடேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அதிகாரப் பகிர்வு வழங்குவதை இனியும் தாமதப்படுத்த முடியாது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டையே, மஹிந்த ராஜபக்ஷ அன்று கொண்டிருந்தார். அந்த நிலைப்பாட்டில்தான் சுதந்திரக் கட்சி இன்றும் இருக்கிறது” என்றார்.
“இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்கள் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. மீண்டும் வழிநடத்தல் குழு கூடி உடன்பாடில்லாத விடயங்கள் குறித்து ஆராய்ந்து முடிவுக்கு வரும். இதற்கு முதல் உருவாக்கப்பட்ட யாப்பு திருத்தங்களில் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை”என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ புதிய யாப்பு தேவையென கூறியவர்கள் இன்று அதனை எதிர்க்கின்றனர். இதனால், மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதிகாரப்பகிர்வு குறித்து பல்வேறு ஆட்சிகளிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும் அது நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் மறுசீரமைப்பு குறித்தும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்ததை மறுக்க முடியாது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அதிகாரப் பகிர்வு தொடர்பில் உடன்பாட்டை எட்ட வேண்டும். இனியும் அதனை தாமதப்படுத்த முடியாது. ஒஸ்லோவில் புலிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு உறுதியளிக்கப்பட்டது.
தற்போதைய யாப்பில் பௌத்த மதம் தொடர்பாக உள்ள ஷரத்துகள் அவ்வாறே இருக்கவேண்டும் என்பதுதான் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு ஆகும்”
“வடக்கு, கிழக்கை இணைக்கும் யோசனை பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால்,அதற்கு நாம் ஆதரவு தெரிவிக்கவில்லை. பிரிவினை வாதத்துக்கு எதிரான பாதுகாப்பு யோசனையை நாம் ஏற்கிறோம்” என்றார்.
“மாகாண ஆளுநர்கள், அரசியல் செய்வதால் தமது பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக முதலமைச்சர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு போன்றவற்றில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் செயற்பட வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘பிரச்சினைக்குத் தீர்வே பிரதானம்’
“சரித்திரபூர்வமான கலந்துரையாடலொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், புதிய அரசமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் பங்கேற்றுள்ளன. இத்தருணத்தில், பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதே பிரதானமானதாகும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
“இந்த நாட்டில், தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் அல்லர். நாட்டின் இறைமையின் அடிப்படையில் அவர்களும் ஆட்சியதிகாரத்தில் பங்கேற்க வேண்டும். தாமும் இலங்கையர்கள் என்ற மனநிலை தோற்றம்பெற வேண்டும்” என்றார்.
“நாட்டில், பிரதான விடயமாக இருப்பது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாகும். தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றை முன்வைக்கின்ற ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்க்கட்சியில் உள்ளதரப்புகள் எதிர்த்து வந்தமையே கடந்த காலக் கட்டத்தில் இடம்பெற்று வந்தமை வரலாறாகும்” என்றார்.
“சரித்திரபூர்வமான கலந்துரையாடலொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயத்தையே, நாம் தற்போது முன்னெடுக்கின்றோம். அவ்வாறான நிலையில் அதனை எவ்வாறு அவருடைய அணியினர் எதிர்க்க முடியும்” என்றும் வினவினார்.
“இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கெதிராக பகிரங்க குரல்கள் எழுகின்றன. இங்குள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அத்தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் சந்தர்ப்பத்தில் எதிர்த்திருக்கலாம். ஆகக்குறைந்தது வாக்கெடுப்பை கோரியிருக்கலாம். ஆனால், அனைவரும் அதற்கு முழுமையான ஆதரவு வெளியிடுவதாக தெரிவித்தனர்” என்றும் குறிப்பிட்டார்.
“இந்த நாட்டில் உள்ள சகல மதங்களையும், நாங்கள் சமமாகவே மதிக்கின்றோம்.
அனைத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாகவுள்ளது. ஆனாலும் கூட பெரும்பான்மையான பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் பௌத்த மதத்துக்கு, முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் அல்லது தற்போதுள்ளமையைப்போன்றே புதிய அரசியலமைப்பிலும் அமையவேண்டும் என்று விரும்புவார்களாயின் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை” என்றார்.
“நான், ஓர் இலங்கையன். நான், இந்த நாட்டில் சமமாக நடத்தப்படுகின்றேன். ஆட்சியதிகாரத்தில் நான், புறக்கணிக்கப்படவில்லை என்ற நிலைமை உருவாக வேண்டும். அதற்காக, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியுள்ளன. ஆட்சிக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் பங்கேற்கின்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.
“எமது மக்கள், வழங்கிய ஆணையை மீறி எம்மால் இயங்க முடியாது. தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும். வடக்கு, கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்றே எமது மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள்” என்றார்.
“அவர்களின் உரிமைகளை அபிலாஷைகளை மறுக்கின்ற விடயத்தை, நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் திருப்தியடைக்கூடிய தீர்வொன்று கிடைக்கப்படும் சமயத்தில் நாம் அதனைப் பெற்றுக்கொண்டு எமது மக்கள் முன்னால் செல்வோம். அதற்கு அவர்கள் அங்கிகாரம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது” என்றார்.
“எதிர்காலச் சந்ததியினரை துன்பகரமான நிலைமைக்கு தள்ளிவிடக்கூடாது. பிரதான கட்சிகள் இரண்டும் பொது இணக்கப்பாட்டுக்கு வரும் விடயங்களை ஏற்றுக்கொள்ளமுடியுமென்றால் நிச்சயமாக ஆதரவளிப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.
‘நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவும்’
“ எமது நாட்டுக்கு, ஜனாதிபதி ஒருவர் தேவை. எனினும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்கள் ஒழிக்கப்படவேண்டும். அதேபோல, புதிய அரசமைப்பு ஒன்று அவசியமாகும். அது மக்களின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என்று ஜே.வி.பி.யின் எம்.பியான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
“ புதிய அரசமைப்பின் ஊடாக, நாட்டின் பொருளாதார, சமூக பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. எனினும், அரசியல் ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” என்றார். “1994 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக உறுதியளித்தார்கள். நிறைவேற்று அதிகாரத்தின் காரணமாகத்தான் ஊழல்வாதிகள் உருவாகினார்கள். நாட்டில் இவ்வாறானவர்களை உருவாக்கிய நிறைவேற்று அதிகார முறைமை நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நீக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆசியாவில், மிகப் பழமையான ஜனநாயக நாடாக இலங்கை கருதப்படுகிறது. நாட்டில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது. எமது நாட்டுக்கு அரசமைப்பு ஒன்று அவசியமாகும். அது மக்களின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடாகும்” எனத் தெரிவித்தார்.
புலிகளுக்கு சீமெந்து மூடைகளை கொடுத்தவர்களை எங்களுக்குத் தெரியும். இந்த அரசாங்கத்திலும், கடந்த அரசாங்கங்களிலும் கொள்ளையடித்தவர்களையும் எங்களுக்குத் தெரியும், ஆகையால் நாங்கள் புலியுமல்ல” என்றார்.
‘இடைக்கால அறிக்கையை ஏற்கோம்’
“அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை, நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனை நாம் முற்றாக எதிர்க்கிறோம். இது, ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து தன்னிச்சையாகத் தயாரித்த அறிக்கையாகும்” என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
“புதிய அரசமைப்பில் பௌத்த சமயத்துக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவ்வாறான இடம் வழங்கப்படவில்லை. அத்துடன் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் இந்நேரத்தில், புதிய அரசமைப்பு தேவையா என்றும் வினவினார்.
“ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் முன்வைத்த யோசனைகள் இந்த அறிக்கையில் உள்வாங்கப்படவில்லை. எமது யோசனைகள் உள்வாங்கப்படாவிட்டால், அரசமைப்புக்குழுவில் இருந்து நாங்கள், விலகுவதாக ஏற்கெனவே பிரதமரிடம் தெரிவித்திருந்தோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாகாணங்களை இணைக்கக் கோருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அரசமைப்பு விவகாரத்தில் பிரதமரே, குழுவின் தலைவராக இருந்து தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதுடன், அவரின் தேவைக்கு ஏற்றவாறு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் எழுந்தமானமாக, தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறார்” என்றும் அவர் குற்றஞ்சுமத்தினார்.
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆகியனவற்றின் யோசனைகள் ஒன்றாக இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாத்திரமே இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறனர்” என்றார்.
“வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோருகிறார்கள். அவ்வாறு இணைத்தால் என்னாவது? அவர்களுக்குத் தனியான அதிகாரத்தை வழங்குவதற்கு வழிசமைக்கப்படுகிறதா?
“வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் சமாதானமாக வாழவில்லையா? அவர்கள் சுதந்திரமாக தொழில்புரியவில்லையா?
மாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத, பயங்கரமான செயற்பாடு என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இது, வெளிநாடுகளின் தேவைகளுக்காக, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்படுகின்ற அரசமைப்பாகும். தெளிவாகச் சொல்வதானால், புலம்பெயர் தமிழர்களுக்கும் சில வெளிநாடுகளுக்கும் தேவையான வகையில் அவர்களுடைய யோசனைகளே இந்த அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினர் என்ற வகையில், இந்த அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பதை இந்த நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் இந்த உயர்ந்த சபைக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago