2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘வீடமைப்புத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு’

Editorial   / 2020 மே 17 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் ​முன்னெடுக்கப்படும், இந்திய உதவி வீடமைப்பு திட்டம் எந்தவித சிக்கலும் இல்லாமல் சீராக நடைபெற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, இந்திய வீடமைப்புத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோமெனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகார பகிர்வின் ஒரே நடைமுறை ஊன்றுகோலாக இருக்கின்ற மாகாணசபை, 13​ஆம் திருத்தம், உள்ளிட்ட தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் இந்தியா கரிசனை தொடர வேண்டுமெனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான புதிய உயர் ஸ்தானிகரான கோபால் பாக்லேயை வாழ்த்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன், உயர்ஸ்தானிகருடன் தொலைபேசியில் உரையாடிய விடயம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல வருடங்களாக இந்திய  வீடமைப்பு திட்டம் நின்று போயிருந்தது. எமது ஆட்சி அமைக்கப்பட்டவுடன், குடியிருப்பாளர்களுக்கு நில உரிமையை வழங்க நாம் அமைச்சரவை அனுமதியை பெற்றோம்.

இந்திய  வீடமைப்பு திட்டம் தொடர்பில் முன்னாள் இந்திய தூதுவருடன், எமது கூட்டணியின் பிரதித் தலைவர் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டார்.

கடந்த காலங்களில் இருந்த முறையற்ற அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, நாம் மலையகத்தில் தோட்ட தொழிலாளர்களை கிராவாசிகளாக மாற்றும் புதிய கிராமங்களை இந்திய  வீடமைப்பு திட்டம் மூலம் ஆரம்பித்து நடத்தினோம்.

அதேபோல் இந்நாட்டில் மாகாணசபை முறைகளையும், 13ஆம் திருத்தத்தையும் பாதுகாத்து மேலும் வலுப்படுத்தும் தார்மீக பொறுப்பை இந்தியா எப்போதும் கைவிடக்கூடாது.

இது தொடர்பிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முழுமையான ஒத்துழைப்பு இந்திய அரசாங்கத்துக்கு எப்போதும் உண்டு.

எமது ஆட்சியின் போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இலங்கை மலையகத்துக்கு வந்தபோது வரலாற்றில் மிகப்பெரிய ஒரு வரவேற்பு கூட்டத்தை நாம் முன்னின்று நோர்வூட் நகரில் நடத்தினோம்.

அக்கூட்டத்திலேயே மேலும் பத்தாயிரம் வீடுகளை அமைக்கும் புதிய அறிவிப்பை பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார் என்பதையும், பாரத பிரதமரின் அன்றைய தூதுக்குழுவில் சிறப்பு அதிகாரியாக நீங்கள் (கோபால் பாக்லே) வருகை தந்ததையும் நான் நினவு கூர விரும்புகிறேன்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கூட்டணியின் வாழ்த்தை வரவேற்று பதிலளித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் முழுமையான ஒத்துழைப்பை தான் வரவேற்பதாகவும், இவை பற்றிய சமகால வரலாறு மற்றும் நிலைவரங்கள் பற்றித் தான் அறிந்து வருவதாகவும், இயல்பு நிலைமைகள் திரும்பிய பின் நேரடியாகச் சந்தித்து உரையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X