R.Tharaniya / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வினால் ‘இளஞ்சிவப்பு’ நிறத்திலான கடல்போல் மாறிய கிளிநொச்சி நகரம்
தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஒக்டோபர் 05ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியில் 1000ற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும், 500ற்கும் அதிகமான பார்வையாளர்களும் கலந்துகொண்டனர்.
இதனால் கிளிநொச்சி நகரம் இளஞ்சிவப்பு நிறத்திலான கடல்போன்று காட்சியளித்தது.
மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் இணைந்து : 20 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதத்தில் ஒரு முறை மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் வகையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வடமாகாண ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல திசாநாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியானது 250 மீற்றர் தூர நீச்சல், 6 கிலோமீற்றர் தூர சைக்கிளோட்டம் மற்றும் 3 கிலோமீற்றர் தூர நடை அல்லது ஓட்டத்தை உள்ளடக்கியதாக இருந்தது.
இளஞ்சிவப்பு நிறத்திலான டீ-ஷேர்ட் அணிந்த பங்குபற்றுனர்கள் தலா மூவர் அடங்கிய குழுக்களாக இதில் பங்கெடுத்தனர். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டும் செய்தியை தமது வீடுகள், பாடசாலை மற்றும் கிராமங்களுக்குக் கொண்டுசென்ற இவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியன இணைந்து சுகாதார அமைச்சு, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சியின் கூட்டாண்மையுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. ரொட்டரி கழகம், லயன்ஸ் கழகம், செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் உள்ளிட்ட அமைப்புக்களும் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.
இந்த நிகழ்வானது இந்திரா ஜயசூரியவிற்காக அவரது தந்தையுமான முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள், தனது மகளின் மார்பகப் புற்றுநோயை எதிர்கொண்ட தைரியமான போராட்டத்தை நினைவுகூர்ந்து நிறுவிய இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் மறக்கமுடியாத மரபைப் பறைசாற்றும் வகையில் அமைந்தது.
இந்த விழிப்புணர்வு நெடுமுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி மட்டக்களப்பிலும், 19ஆம் திகதி மாத்தறையிலும், 26ஆம் திகதி கொழும்பிலும் நடத்தப்படவுள்ளது.










3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago