2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: 14ஆம் நாள் முடிவுகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 26 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டிகளின் படி ஆர்ஜன்டீனா, நைஜீரியா அணிகள் குழு F இருந்தும் பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து அணிகள் குழு E இல் இருந்தும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. 
 
குழு  F இற்காக நடைபெற்ற ஆர்ஜன்டீனா - நைஜீரியா அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆர்ஜன்டீனா அணி 3 இற்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் கோலை லியனல் மெஸ்சி, ஆர்ஜன்டீனா அணிக்காக 3ஆவது நிமிடத்தில் அடித்தார். ஒரு நிமிடத்தில் அஹெமட் முஸ்ஸா அடித்த கோல் மூலம் போட்டி சமநிலை அடைந்தது. லியனல் மெஸ்சி  45ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். 47ஆவது நிமிடத்தில் அஹெமட் முஸ்ஸா அடித்த கோல் மூலம் போட்டி மீண்டும் சமநிலை அடைந்தது. 50ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணி வீரர் மார்கோ ரோஜா அடித்த கோல் மூலம் ஆர்ஜன்டீனா அணி முன்னிலை பெற்று  போட்டியை வென்றது. 
 
இதன் மூலம் குழு F இல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
 
ஈரான் - பொஸ்னியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பொஸ்னியா அணி 3 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஈரான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை இல்லாமல் செய்தது. பொஸ்னியா அணி ஏற்கெனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது. எடின் செக்கோ, முதல் கோலை 23ஆவது நிமிடத்தில் பொஸ்னியா அணிக்காக அடித்தார். மிரலெம் ஜனிக் 59ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். 82ஆவது நிமிடத்தில் ரெஸா ஈரான் அணியின் கோலை அடித்தார். அவ்டிஜா வர்ஜவிக், பொஸ்னியா அணியின் மூன்றாவது கோலை 83ஆவது நிமிடத்தில் அடித்தார். எடின் செக்கோ போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் குழு F இல் பொஸ்னியா அணி 3 புள்ளிகளுடன் மூன்றமிடத்தைப் பெற்றது. ஈரான் அணி 1 புள்ளியுடன் நான்கமிடத்தைப் பெற்றது, நைஜீரியா அணி 4 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
 
குழு E இற்கான போட்டியில் சுவிசர்லாந்து அணி, ஹொன்டியுராஸ் அணியை 3 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது. அடிக்கப்பட்ட மூன்று கோல்களையும் சேர்டான் சக்கிரி 6, 31, 71ஆவது நிமிடங்களில் சுவிட்ஸர்லாந்து அணிக்காக அடித்தார். அவரே போட்டியின் நாயகனாக தெரிவானார். இந்த வெற்றி மூலம் சுவிட்ஸர்லாந்து அணி 6 புள்ளிகளைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது. மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த ஹொன்டியுராஸ் அணி குழு E இல் நான்காவது இடத்தைப் பிடித்தது. 
 
குழு E இற்கான மற்றைய போட்டியில் பிரான்ஸ், எக்குவாடர் அணிகள் மோதின. கோல்கள் அடிக்கப்படாத சமநிலைப் போட்டியாக இந்தப் போட்டி நிறைவடைந்தது. பிரான்ஸ் இந்த சமநிலை முடிவுடன் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தனதாக்கியது. எக்குவாடர் அணி 4 புள்ளிகளைப் பெற்று மூன்றமிடத்தைப் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. அலெக்சாண்டர் டொமின்கியூஸ் போட்டியின் நாயகனாக தெரிவானார். 
 
நிறைவடைந்துள்ள குழு E, குழு F போட்டிகளின் படி இரண்டாம் சுற்றில் பிரான்ஸ், நைஜீரியா அணிகளும், ஆர்ஜன்டீனா, சுவிட்ஸர்லாந்து அணிகளும் மோதவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .