2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

உலகக்கிண்ண காலிறுதியில் மேற்கிந்தியத்தீவுகள்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில், இன்று இடம்பெற்ற போட்டிகளில் பங்காளதேஷ், தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே  அணிகளுக்கிடையில் சிட்டகொங்கில் இடம்பெற்ற போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஷமார் ஸ்பிரிங்கர் 61 ஓட்டங்களையும் டெவின் இம்லா 31 ஓட்டங்களையும் கிட்ரொன் போப் 30 ஓட்டங்களையும்  பெற்றனர். பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக  ருகாரே மகாரியா 3 விக்கெட்டுகளையும் வெஸ்லி மதேவெரே 2 விக்கெட்டுகளையும்  கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன் மூலம், வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சாவுன் ஸ்னைடர் 52 ஓட்டங்களையும் அடம் கபீ 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அல்சாரி ஜோசப் 4  விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பங்காளதேஷ் அணிக்கும் நமீபிய அணிக்குமிடையில் கொக்ஸ் பஸாரில் இடம்பெற்ற போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்காளதேஷ் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதாக தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபிய அணி, போட்டி நடைபெற்ற 32.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, நிக்கோ டாவின் 19 ஓட்டங்களையும் லோகன் லோரன்ஸ் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பங்காளதேஷ் அணி சார்பாக சலே அஹமட் ஷவோன், மெஹெடி ஹசன் மிராஸ், அரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஜொய்ராஸ் ஷெயிக் 34 ஓட்டங்களையும் நஸ்முல் ஹூசைன் சான்டோ 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நமீபியா பிரிட்ஸ் கொயேட்சி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதேவேளை, தென்னாபிரிக்க மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் கொக்ஸ் பஸாரில் இடம்பெற்ற போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 45.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஹரிஸ் கார்னேஜ் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களைப் பெற்றதுடன்,  பைனலி மெக்ரா 24 ஓட்டங்களைப் பெற்றார்.பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக டயன் கலியம், வியான் முல்டர், சீன் வைட்ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 29 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, லயம் ஸ்மித், கெயில் வெர்ரியன்னே ஆகியோர் தலா 64 ஓட்டங்களைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .