2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

'எனது சாதனையை அன்டர்சன் இலகுவில் முறியடிப்பார்'

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 05 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைத் தன்வசம் கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மக்ரா, தனது சாதனையை இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், இலகுவாக முறியடிக்க முடியுமெனத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கெதிராக இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 450ஆவது விக்கெட்டைக் கைப்பற்றிய அன்டர்சன், இதுவரை 451 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மறுபுறத்தில், சாதனை விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள கிளென் மக்ரா, 563 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதன்படி, சாதனையை முறியடிப்பதற்கு, ஜேம்ஸ் அன்டர்சனுக்கு 112 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த கிளென் மக்ரா, 'போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால், அதை அவரால் மிக இலகுவாகச் செய்து, என்னை வீழ்த்த முடியும். அவருக்கு அதற்கு வாழ்த்துகள். அவர் மிகவும் தரமிக்க பந்துவீச்சாளர். அதுகுறித்துச் சந்தேகம் கிடையாது" எனத் தெரிவித்தார்.

அண்மைக்காலத்தில், மிகச்சிறப்பாகப் பந்துவீசிவரும் ஜேம்ஸ் அன்டர்சன், அவரது உடற்றகுதியில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், மிகவும் பயனடைந்துள்ளார். அதை, மக்ராவும் சுட்டிக்காட்டினார். 'வேகப்பந்து வீச்சாளராக இருப்பது, உடலுக்குக் கடினமானது. அதுபற்றி எந்தவிதச் சந்தேகமும் கிடையாது. நீங்கள் உடற்றகுதியுடனும் பலமாகவும் இருக்க வேண்டும், அதேபோல் காயமின்றியும் இருக்க வேண்டும். கடந்த காலங்களில், அவருக்குச் சில பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அவர் அதிலிருந்து மீண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையால் இறுதியாக வெளியிடப்பட்ட தரப்படுத்தலில், பந்துவீச்சாளர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ள ஜேம்ஸ் அன்டர்சன், கடந்த 24 மாதங்களில், 23 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி, 20.87 என்ற சராசரியில் 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .