2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

'கொள்ளை'ப் பொய்: அனுசரணையாளர்களை இழந்தார் லொக்டே

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரேஸிலின் றியோ டீ ஜெனீரா நகரத்தில் காணப்பட்ட நேரத்தில், துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாகப் பொய் சொல்வதாக வெளிப்படுத்தப்பட்ட அமெரிக்க நீச்சல் வீரரான றயன் லொக்டே, பொலிஸாரின் நடவடிக்கைகளிலிருந்து தப்பியுள்ள போதிலும், பொருளாதார ரீதியாகவும் அவரது நற்பெயர் ரீதியாகவும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்.

மதுபோதையில் பெற்றோல் நிரப்பு நிலையமொன்றில் ரகளை செய்ததோடு மாத்திரமல்லாது, பொது இடத்தில் சிறுநீர் கழித்தமை காரணமாக பாதுகாப்பு அதிகாரியொருவரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட லொக்டேயும் இன்னும் மூன்று ஒலிம்பிக் வீரர்களும், தாங்கள் துப்பாக்கிதாரிகளால் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆரம்பத்தில் பிரேஸிலுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய இந்நிகழ்வு, பின்னர் லொக்டே, பொய் சொன்னார் என்பது நிரூபிக்கப்பட, லொக்டேயுக்கான தலைக்குனிவாக மாறியது. அதில், இவ்விடயம் வெளிப்படுத்தப்பட முன்னரே அவர் அமெரிக்காவுக்குச் சென்றுவிட, ஏனைய மூவரும் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தனது நடத்தை தொடர்பாக மன்னிப்புக் கோரிய லொக்டே, நடந்தவை பற்றி தான், மிகைப்படுத்தி விட்டதாகத் தெரிவித்தார். நடந்த விடயத்தை முழுமையாக மாற்றிப் பொய் சொன்னார் என்பதை அவர் நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையிலேயே, அவருக்கு அனுசரணை வழங்கிவந்த பெரிய நிறுவனங்கள் நான்கு, தமது அனுசரணையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளன. நீச்சல் ஆடைகள் உட்பட நீச்சலுக்குத் தேவையானவற்றை விற்பனை செய்யும் Speedo நிறுவனத்தின் அமெரிக்கப் பிரிவு, ஆடை நிறுவனமான Ralph Lauren, உரோமங்களை நீக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும் இஸ்ரேலிய நிறுவனமான Syneron Candela, மெத்தை உற்பத்தி செய்யும் ஜப்பானிய நிறுவனமான Airweave ஆகியனவே, இவ்வாறு தமது அனுசரணையை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளன. இதன்மூலம், லொக்டேயுக்குக் காணப்பட்ட பிரதான அனுசரணையாளர்கள் அனைவரையும் அவர் இழந்துள்ளார்.

இம்முறை பெற்ற தங்கம் உட்பட, இதுவரை 6 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் 3 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ள லொக்டே, நீச்சலில் ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .