Shanmugan Murugavel / 2016 ஜனவரி 14 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, அந்தத் தொடரில் ஒரு போட்டியைத் தவிர அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்ததோடு, களத்துக்கு வெளியேயும் பிரச்சினைகளை எதிர்கொண்டதாதகக் கூறப்படும் நிலையில், நியூசிலாந்துத் தொடரை 'மனதைத் தாக்கக்கூடியதும் அவமானகரமானதுமான தொடர்" என, இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் வர்ணித்துள்ளார்.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்ததோடு, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்திருந்தது.
தவிர, மதுபானத்துடன் கூடிய களியாட்டங்களில், இரவிரவாக வீரர்கள் பங்குபற்றியதாகவும், அணிக்குள் ஒற்றுமைக்குலைவு காணப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இது தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாகவும், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
தவிர, மைதானத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த திலகரட்ண டில்ஷானை நோக்கி இரசிகரொருவர், 'கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுங்கள்" எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுடன் டில்ஷான், வாய்த்தர்க்கத்தில் ஈடுபடும் காணொளியொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
அது பற்றிக் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ், 'வீரர்களாக, தோற்பதற்காக நாங்கள் விளையாடுவதில்லை. எனவே, அது போன்று இரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, எங்களுக்கு வருத்தத்தைத் தருகிறது. அதேபோல், நாங்கள் தோல்வியடையும் போது, இரசிகர்களுக்கும் வருத்தம் ஏற்படுகிறது. அதை, இரண்டு வழிகளிலும் பார்க்க வேண்டும். அந்தத் தொடர், மனதைத் தாக்குவதாகவும் அவமானகரமானதாகவும் அமைந்திருந்தது" எனத் தெரிவித்தார்.
எதிர்பார்ப்புக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்தாமை தொடர்பில் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்த மத்தியூஸ், பயிற்சிகள், திட்டமிடுதல் ஆகியன உட்பட, செய்யக்கூடிய அனைத்தையும் செய்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்தத் தொடரில் ஆரம்பத்தில் சோபிக்கத் தவறிய மத்தியூஸ், பின்பகுதியில், சிறப்பாக விளையாடியிருந்தார். எனினும், முக்கியமான நேரங்களில் பந்துவீசுவதை அவர் தவிர்த்திருந்தார். அதுகுறித்துக் கேட்கப்பட்டபோது, 3ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியைத் தொடர்ந்து தனக்கு உபாதை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே பந்துவீசவில்லை எனவும் அவர் பதிலளித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இத்தொடரின் இருபதுக்கு-20 தொடருக்காக அணித்தலைவர் பதவி வகித்த டினேஷ் சந்திமால், இருபதுக்கு-20 தரப்படுத்தலில் முதலிடத்தை இழந்தமை குறித்துக் கவலையை வெளிப்படுத்தினார்.
'அணியாக நாங்கள், எங்களது தரப்படுத்தலைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினோம். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டோம். அது குறித்து நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .