2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

'யோக்கர் வேண்டாம்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 24 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று  இடம்பெற்ற போட்டி, விறுவிறுப்பானதாக அமைந்ததோடு, இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமைந்திருந்தது. இந்தப் போட்டியின் இறுதி ஓவர், மிகவும் சுவாரசியமானதாக மாறியிருந்த நிலையில், அது தொடர்பான விவரங்களை, இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங் டோணி வெளியிட்டுள்ளார்.

இதன்போது, இறுதிப் பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்த நிலையில், அப்பந்தை யோக்கராக வீச வேண்டாமென முடிவெடுக்கப்பட்டதாக, டோணி குறிப்பிட்டார்.

பெங்களூரில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, இறுதி ஓவரில் 4 விக்கெட்டுகள் கைவசமிருந்த நிலையில், 11 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. ஹார்டிக் பாண்டியா வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளிலும் 9 ஓட்டங்கள் பெறப்பட, இறுதி 3 பந்துகளில் 2 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன. எனினும், முன்னாள் அணித்தலைவர் முஷ்பிக்கூர் ரஹீம், அவ்வணியின் முக்கிய துடுப்பாட்ட வீரரான மகமதுல்லா இருவரும் 4ஆவது, 5ஆவது பந்துகளில் ஆட்டமிழக்க, இறுதிப்பந்தில் 2 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது.

அனுபவம் குறைந்த வீரரான ஹார்டிக் பாண்டியா, எவ்வாறு பந்துவீச வேண்டுமெனக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. வழக்கமாக, ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, யோக்கர் பந்துகளையே வீசுவது வழக்கமென்ற போதிலும், அதற்கு மாறான தீர்மானமொன்றையே, இந்திய அணி எடுத்தது. அது தொடர்பில், இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி விளக்கினார்.

'யோக்கர் பந்தை வீச வேண்டாமென்பது, உறுதியான முடிவாக அமைந்தது" என அவர் தெரிவித்தார். மாறாக, பவுண்சர் பந்தை விட முன்னேயும், வழக்கமான சாதாரண பந்துகளை விட பின்னேயும் வீசப்படும் back of the length பந்தொன்றை வீசுவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக டோணி குறிப்பிட்டார். அந்தப் பந்து, அகலமாக வீசப்பட வேண்டுமென்ற முடிவு காணப்பட்ட போதிலும், மிகவும் அகலமாக வீச வேண்டாமெனவும் முடிவெடுக்கப்பட்டதாக டோணி தெரிவித்தார்.

அந்தப்பந்துக்குக் களத்தடுப்பில் ஈடுபடும் போது, தனது விக்கெட் காப்புக் கையுறைகளில் ஒன்றைக் கழற்றிவிட்டே, விக்கெட் காப்பில் ஈடுபட்ட டோணி, துடுப்பாட்ட வீரர் பந்தைத் தவறவிட்டதும் ஓடி வந்து, விக்கெட்டைச் சாய்த்து, ஆட்டமிழப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தோல்வி குறித்துக் கருத்துத் தெரிவித்த பங்களாதேஷ் அணித்தலைவர் மஷ்ரபி மோர்தஷா, 'இறுதி 3 பந்துகள் வரை நாம் உச்சத்தில் இருந்தோம். ஒன்றொன்றாக ஓட்டங்களைப் பெற்றிருக்கலாம். எவ்வாறிருந்தாலும், துரதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது. இறுதி 3 பந்துகளிலும், 3 விக்கெட்டுகளை நாம் இழந்தோம். 3 பந்துகளில் 2 ஓட்டங்களை மாத்திரமே பெற வேண்டியிருந்தது" என்றார்.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள பங்களாதேஷ் அணி, உலக இருபதுக்கு-20 தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .