2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஐ.பி.எல் விசாரணைக்குழுவில் கங்குலி?

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரீமியர் லீக் சூதாட்ட சர்ச்சைகளை விசாரிக்கும் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி இணைக்கைப்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, இந்த சூதாட்ட விவகாரம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை செய்து, அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசன் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஸ்ரீனிவாசன் மற்றும் தேசிய கிரிக்கெட் வீரர்களும் அடங்கலாக 13 பேரின் பெயர்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

முதற்கட்ட விசாரணைகள் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர போதுமானதாக இல்லாமையினால், இரண்டாம் கட்ட விசாரணைகள் செய்யப்படவுள்ளன. உயர்நீதிமன்றம் முகுல் முட்கலிடம் இந்த பொறுப்பை மீண்டும் வழங்கியுள்ளது. முகுல் முட்கலின் தலைமையிலான குழுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை எதிர்த்த போதும் உயர் நீதிமன்றம் அவரிடமே இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சி.பி.ஐ அதிகாரி ஒருவர் இந்தக் குழுவில் இணைந்துக் கொள்ளப்படுள்ள அதேவேளை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவரும் இணைக்கப்படவேண்டும் என முகுல் முட்கல் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி அதற்கு பொருத்தமானவர் எனவும் அவர் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட வாய்ப்புக்கள் உள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வம்சத்தின் ஒரு வாரிசான சௌரவ் கங்குலி, இந்திய தேசிய கிரிக்கெட் அணி சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி புதிய அணியாக உருவாகும் வேளையில் இந்திய அணியை வளர்த்தவர் என்பதுடன், தன் கருத்துக்களை நேரடியாக பயமின்றி எல்லோருக்கும் சொல்லக் கூடிய ஒருவர் என்ற பெயரையும் கொண்டவர். எனவே இவர் பொருத்தமாக இருப்பார் என்ற நிலையிலேயே இவரின் பெயர் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தெரிவுக்குழுவில் இடம் பெற்று இருந்தவருமான மொஹிந்தர் அமர்நாத் இந்தக் குழுவில் இணையும் வாய்ப்புகளும் உள்ளாதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்த வேளையில் டோனி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்படவேண்டும் என்ற கருத்துகளை வெளியிட்டவர் மொஹிந்தர் அமர்நாத். இதன் காரணமாக தெரிவுக்குழுவில் இருந்து அப்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஸ்ரீனிவாசனால் காரணங்கள் இன்றி நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்ட விசாரணைகளை செய்யவுள்ள குழு கடந்த வெள்ளிகிழமை அறிவிக்கப்பட இருந்த போதும் யார் மூன்றாவது நபர் என்பது முடிவாகாமையினால் அறிவிக்கப்படவில்லை. நாளைய தினம் இந்த விசாரணைக்குழு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X