2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி கைவிடப்பட்டது

A.P.Mathan   / 2015 மே 09 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையில் டப்ளினில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டி 18 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் கடும் மழை காரணமாக கைவிடப்பட்டது.

ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணிக்கு ஜேம்ஸ் டெய்லர் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அந்த அணி விளையாடிய முதலாவது போட்டி இதுவாகும். அத்தோடு 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து அணியில் ஐந்து அறிமுக வீரர்கள் ஒரே போட்டியில் இடம்பிடித்த சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது. 

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. போட்டி ஆரம்பித்த நேரம் முதலே மழைபெய்துகொண்டிருந்தாலும் விளையாடக்கூடிய நிலைமை காணப்பட்டதால் போட்டியை நடத்த நடுவர்கள் தீர்மானித்தனர். ஆயினும் 18 ஆது ஓவர் நிறைவுபெறும் வேளையில் கடும் மழை பிடித்துக்கொண்டதால் போட்டி இடை நிறுத்தப்பட்டது. அந்த வேளையில் அயர்லாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. 

இங்கிலாந்து அணியின் அறிமுகவீரர்களான மார்க் வூட், டேவில் வில்லி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர். டிம் பிரெஸ்னனும் தன் பங்குக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். தொடர்ந்தும் கடுமையான மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .