2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இந்தியா தோல்வி

A.P.Mathan   / 2015 ஜூலை 20 , மு.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையே ஹராரே விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்ற இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபது-20 போட்டியின் இரண்டாவது போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
 
ஆரம்பத்தில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணித்தலைவர் சிகண்டர் ராசா தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். சிம்பாப்வே அணி சார்பாக காயமடைந்த அவ்வணியின் நிரந்தரத்தலைவர் எல்டன் சிக்கும்புரா, வேகப்பந்து வீச்சாளர் நெவில்லி மட்சிவாவுக்கு பதிலாக உடற்தகுதி சோதனையில் தேறிய சீன்ம வில்லியம்ஸ், மல்கம் வோலர் ஆகியோர்  அணியில் இடம்பெற்றனர். இந்திய அணியில் ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக சஞ்சு சாம்ஸன் அறிமுகத்தை மேற்கொண்டார்.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்க்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அதிகபட்சமாக சமு சிபாபா 51 பந்துகளில் 9 பவுண்டரி உள்ளடங்கலாக 67 ஓட்டங்களை பெற்றார்.
 
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார், மோஹித் ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்ஷார் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் உத்தப்பாவை தவிர மற்றைய அனைத்து வீரர்களும் தொடர்ச்சியான இடைவெளிகளில் ஆட்டமிழந்து செல்ல 20 ஓவர்கள் முடிவில் 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
 
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக உத்தப்பா 25 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 42 ஓட்டங்களை பெற்றார்.
 
பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட கிரேமி கிரீமர் தனது 4 ஓவர்களில் 18 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.
 
போட்டியின் ஆட்டநாயகனாக சமு சிபாபா தெரிவானார்.

முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தநிலையில், இரு போட்டிகள் கொண்ட தொடர் இரு அணிகளுக்கிடையேயும் பகிரப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .