Shanmugan Murugavel / 2016 ஜனவரி 13 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தை ஏற்காமை காரணமாக, இந்தியாவுக்கெதிராகத் தீர்ப்புகள் கிடைக்கின்றன என்றவாறான கருத்தை, இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் டோணி வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 1ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், இந்திய அணி 309 ஓட்டங்களைப் பெற்ற போதிலும், ஸ்டீவன் ஸ்மித்தின் 149, ஜோர்ஜ் பெய்லியின் 112 ஓட்டங்கள் காரணமாகத் தோல்வியடைந்தது.
இதில் அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 21 ஓட்டங்களுடன் காணப்பட்டபோது களமிறங்கிய ஜோர்ஜ் பெய்லி, முதலாவது பந்திலேயே, விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தமைக்கான ஆட்டமிழப்புக் கோரப்பட, நடுவர் றிச்சர்ட் கெற்றல்புரோ, அக்கோரிக்கையை நிராகரித்தார். எனினும், மீள் ஒளிபரப்புகளின்போது, ஜோர்ஜ் பெய்லியின் கையுறையில் பந்து பட்டமை வெளிப்பட்டது.தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்துக்கு இந்தியா வெளிப்படுத்திவரும் எதிர்ப்புக் காரணமாக, இந்தத் தொடரில், அத்திட்டம் பயன்படுத்தப்படவில்லை.
ஆட்டமிழப்புக் கோரிக்கை தொடர்பாக ஜோர்ஜ் பெய்லியிடம் கேட்கப்பட்டபோது, 'அதை, தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தில் பார்ப்பது சுவாரசியமாக இருந்திருக்கும். ஆனால், அத்திட்டத்தை எதிர்க்கும் அணி, நாமல்ல" என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவ்வாட்டமிழப்புக் கோரிக்கை தொடர்பாக டோணியிடம், பல கேள்விகள் தொடுக்கப்பட்டன. அதன்போது, 'தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தை ஏற்காமை காரணமாக, 50-50 என காணப்படும் தீர்ப்புகள், இந்தியாவுக்கெதிராகச் செல்கின்றனவா?" எனக் கேட்கப்பட்டபோது, 'நான் உங்களது கருத்தை ஏற்கக்கூடும்"என இரண்டு தடவைகள் தெரிவித்ததோடு, 'அதன் காரணமாகத் தான்..." என வசமொன்றைத் தொடங்கிவிட்டு நிறைவுசெய்யாமல் விட்டிருந்தார்.
அதற்கு முன்பதாகவும், கேள்வியொன்றுக்கு, 'தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தை நாங்கள் பயன்படுத்தாமை காரணமாக, எங்களுக்குச் சார்பாக முடிவுகள் கிடைக்கவில்லை என மறைமுகமாகச் சொல்கிறீர்களா?" என, டோணி எதிர்க்கேள்வி கேட்டிருந்தார்.
முக்கியமான அம்முடிவு, இந்தியாவுக்கெதிராகச் சென்ற போதிலும், தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தை ஆதரிப்பதற்கான சமிக்ஞையை, டோணி வெளிப்படுத்தவில்லை.
தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டம் இருந்திருந்தால், போட்டியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்பதை ஏற்றுக் கொண்ட டோணி, எனினும், 'அதேநேரம், சரியான முடிவுகளை எடுக்க, நடுவர்களை நாம் தூண்ட வேண்டும்" எனத் தெரிவித்ததோடு, இத்திட்டம் தொடர்பில் இன்னமும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.
இத்திட்டத்துக்கான எதிர்ப்பில், இந்திய அணி ஒரே குரலில் காணப்படுகின்றதா என்ற கேள்விக்கு, நேரடியான பதிலை, அவர் வழங்கியிருக்வில்லை. எனினும், தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டம், நடுவர்களின் தீர்ப்பை நியாயப்படுத்தும் திட்டமாக அன்றி, தீர்ப்பை மேற்கொள்ளும் திட்டமாக மாற்றம்பெற வேண்டுமென அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .