2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

அரையிறுதியில் ஜோக்கோவிச், செரினா, பெடரர், ரட்வன்ஸ்கா

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 26 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கொவிச், முதல்நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், 3ஆம் நிலை வீரரான ரொஜர் பெடரர், 4ஆம் நிலை வீராங்கனையான அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர். அதேபோல், பெண்கள் இரட்டையர் போட்டிகளில், சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடியும் அரையிறுதிக்குள் நுழைந்தது.

சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சுக்கும், 7ஆம் நிலை வீரரான ஜப்பானின் கேய் நிஷிகோரியும் மோதிய போட்டியில், 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில், ஜோக்கொவிச் வெற்றிபெற்றார். நடப்புச் சம்பியனான ஜோக்கோவிச், தனது பட்டத்தைத் தக்க வைப்பதற்கு, இன்னுமிரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டியுள்ளது.

அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸூம் 5ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும் மோதிய போட்டியில், 6-4, 6-1 என்ற செட் கணக்கில் செரினா வெற்றிபெற்றார். ஷரபோவாவுக்கெதிராக செரினா வில்லியம்ஸ் தொடர்ச்சியாகப் பெறும் 16ஆவது வெற்றி இதுவாகும்.

3ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 6ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தோமஸ் பேர்டிச்சை எதிர்கொண்டார். முதலாவது செட்டில் போட்டியிட வேண்டியேற்பட்ட அவர், பின்னர் சிறப்பாக விளையாடி, 7-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். பெண்களின் 4ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, 11ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் கார்லா சுவரேஸ் நவராவை எதிர்கொண்டு, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

பெண்கள் இரட்டையர் போட்டியில், உலகின் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் சானியா மிர்ஸா - சுவிற்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஜேர்மனியின் அன்னா-லேனா, அமெரிக்காவின் கொகோ வன்டெவெகே ஜோடியை எதிர்கொண்டு, 6-2, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

இந்தப் போட்டிகளின் முடிவின் அடிப்படையில், ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டியொன்றில் நொவக் ஜோக்கோவிச்சும் ரொஜர் பெடரரும், பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியொன்றில் செரினா வில்லியம்ஸூம் அக்னியஸ்கா ரட்வன்ஸ்காவும் மோதவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .