Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிபெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற காலிறுதியில் வெற்றிபெற்றே, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
பதுல்லாவில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. 5 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி சார்பாக, 6ஆவது விக்கெட்டுக்காக 164 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன.
துடுப்பாட்டத்தில் உமைர் மசூட் 113 (114), சல்மான் பயாஸ் ஆட்டமிழக்காமல் 58 (79) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சேமர் கே. ஹோல்டர், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
228 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 40 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டுக்காக 6.2 ஓவர்களில் 45 ஓட்டங்கள் விரைவாகப் பகிரப்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில், 4 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களுடன் சிறிது தடுமாற்றம் காணப்பட்ட போதிலும், அவ்வணி வெற்றிபெற்றது.
துடுப்பாட்டத்தில் தெவின் இம்லாச் 54 (76), ஷிம்ரொன் ஹெட்மையர் 52 (42), ஷமர் ஸ்பிறிங்கர் 37 (37) ஓட்டங்களைப் பெற்றனர்.
இதேவேளை, 9ஆவது இடத்துக்கான அரையிறுதிப் போட்டியில், நடப்புச் சம்பியன்களான தென்னாபிரிக்க அணி, சிம்பாப்வே அணியுடன் தோல்வியடைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 39.5 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய 91 ஓட்டங்களைப் பெற, பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி, 22 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .