2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 26 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், அடிலெயிட் ஓவலில் இடம்பெற்றுள்ள முதலாவது போட்டியில், ஐந்து விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்ப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, அலிஸா ஹீலி, 2, ஆறு ஓட்டங்கள், 5, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 41 ஓட்டங்களையும் பெத் மூனி, 36 பந்துகளில் 2, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக, பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளையும் ஜூலான் கோசுவாமி, அனுஜா பட்டில், ஷிகா பாண்டே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 141 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 18.4 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து எட்டு பந்துகள் மீதமிருக்கையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக ஹர்மன்பிரீட் கௌர், ஒரு 6 ஓட்டம், 6 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 31 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றதோடு, வேதா கிருஷ்ணமூர்த்தி 32 பந்துகளில், ஐந்து நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, மேகன் ஸ்கட், ஜெஸ் ஜொனாஸென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் றெனி பரேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகியாக, இந்திய அணியின் ஹர்மன்பிரீட் கௌர் தெரிவானார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .