2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஆடுகளப் பராமரிப்பாளரை தூஷித்த ரவி ஷாஸ்திரி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 27 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை வன்கெடே மைதானத்தில் ஆடுகளப் பராமரிப்பாளரை, இந்திய கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் ரவி ஷாஸ்திரி, தூஷித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த முறைப்பாட்டை ஆடுகளப் பராமரிப்பாளரான சுதிர் நாயக், மும்பை கிரிக்கெட் சங்கத்தில் மேற்கொண்டுள்ளார்.

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணி, மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 438 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணியால், 224 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இந்நிலையில், தென்னாபிரிக்க அணியின் இனிங்ஸ் முடிவில் சுதிர் நாயக்கை நோக்கிச் சென்ற ரவி ஷாஸ்திரியும் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்றுநர் பி. அருணும், அவர் மீது வசைமாரி பொழிந்ததாகவும் தூஷண வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ரவி ஷாஸ்திரி, 'நல்ல ஆடுகளம். சிறப்பாகச் செயற்பட்டீர்கள்" எனக் கேலியாகத் தெரிவித்ததோடு, அதன் பின்னர் தூஷித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மும்பை கிரிக்கெட் சபை, அக்கடிதத்தை இந்திய கிரிக்கெட் சபைக்கு முன்னகர்த்துவதாக இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, என்ன நடந்தது தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்த பின்னரே, நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

எனினும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள ரவி ஷாஸ்திரி, 'நல்ல ஆடுகளம். சிறப்பாகச் செயற்பட்டீர்கள்" என மட்டுமே தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான தனது கருத்தை வெளியிட்டுள்ள கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளரும் இந்திய முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்ரெக்கர், முன்னாள் கிரிக்கெட் வீரரான சுதிர் நாயக்கையும் அவரது வயதையும் மதிக்க ரவி ஷாஸ்திரி தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .