Shanmugan Murugavel / 2017 ஜனவரி 03 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியின் முதல் நாளில், முழுமையான ஆதிக்கத்தை அவுஸ்திரேலிய அணி வெளிப்படுத்தியுள்ளது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய டேவிட் வோணரும் மற் றென்ஷோவும், மிகச்சிறப்பான ஆரம்பத்தை வழங்கினர். மதியநேரம் வரை, அவ்விருவரும் 27 ஓவர்களில் 126 ஓட்டங்களைக் குவித்திருந்தனர். இதில், மதியநேரத்தின் இறுதி ஓவரில், தனது 78ஆவது பந்தைச் சந்தித்த டேவிட் வோணர், தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இவ்வாறு, டெஸ்ட் போட்டியொன்றின் முதல் நாளின் மதியநேரத்துக்கு முன்பாக சதம் பெற்றவர்களில் 7ஆவது வீரராக, வோணர் மாறினார். அத்தோடு, இந்தச் சாதனையை அவுஸ்திரேலியாவில் படைத்த முதலாமவராகவும் அவர் மாறினார்.
95 பந்துகளில் 113 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது வோணர் ஆட்டமிழக்க, அதுவரையில் 100 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றிருந்த றென்ஷோ, தன்னை வெளிப்படுத்த ஆரம்பித்தார். தனது கன்னிச் சதத்தைப் பூர்த்தி செய்த அவர், முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் 167 ஓட்டங்களுடன் காணப்படுகிறார். மறுபக்கத்தில், தனது ஆரம்பப் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பிரகாசித்துவரும் பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப், ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
முதல்நாளில் 88 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில், 3 விக்கெட்டுகளை இழந்த அவுஸ்திரேலிய அணி, 365 ஓட்டங்களைப் பெற்று, மிகவும் பலமான நிலையில் காணப்படுவதோடு, 2ஆவது நாள் ஆட்டம் நாளை ஆரம்பிக்கும் போது, தமது ஆதிக்கத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள், தொடர்ச்சியாகத் தடுமாறினர். மொஹமட் ஆமிர், இம்ரான் கான் இருவரும், விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை என்பதோடு, முறையே 3.62, 4.76 என, ஓவருக்கு ஓட்டங்களைச் சராசரியாக வழங்கியிருந்தனர். வஹாப் றியாஸ், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அவ்வணியின் சிறந்த பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். 30 ஓவர்களை வீசிய யாசீர் ஷா, 132 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றினார்.
இந்தத் தொடரில், ஏற்கெனவே முதலிரு போட்டிகளையும் தோற்றுள்ள பாகிஸ்தான் அணி, இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், 2ஆவது நாளான நாளை, பாரியளவு முன்னேற்றமான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago