Shanmugan Murugavel / 2016 ஜனவரி 14 , மு.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக்கின், கடந்த புதன்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் ஆர்சனல், லிவர்பூல் அணிகளுக்கிடையிலான போட்டியும் மன்செஸ்டர் சிற்றி, எவெர்ற்றன் அணிகளுக்கிடையிலான போட்டியும் செல்சி, வெஸ்ட் புரோம் அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்ததோடு லெய்செஸ்டர், சௌதாம்டன், ஸ்டோக், சந்தர்லேண்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இதில், ஆர்சனல், லிவர்பூல் அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதி நிமிடத்தில் லிவர்பூலின் ஜோ அலென் பெற்ற கோலின் மூலம், 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அலென் தவிர, லிவர்பூல் சார்பாக ரொபேர்டோ பிளெமிங்கோ 10ஆவது 19ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றிருந்ததோடு, ஆர்சனல் சார்பாக ஆரோன் ரம்ஸே 14ஆவது நிமிடத்திலும் ஒலிவர் ஜிரோட், 25ஆவது, 55ஆவது நிமிடங்களிலும் கோல்களைப் பெற்றிருந்தனர்.
இதேவேளை, மன்செஸ்டர் சிற்றி, எவர்ற்றன் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இந்நிலையில், செல்சி, வெஸ்ட்புரோம் அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதி நிமிடங்களில் வெஸ்ட் புரோமின் ஜேம்ஸ் மக்கெலன் பெற்ற கோலின் மூலம், 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. வெஸ்ட் புரோம் சார்பாக மக்கெலன் தவிர, கிரேய்க் கார்ட்னரும் கோலைப் பெற்றிருந்ததோடு, செல்சி சார்பாக சீஸர் அப்பிலிகுவாட்டா கோலைப் பெற்றதோடு, ‘ஒவ்ண்’ கோல் முறையில் ஒரு கோல் கிடைத்திருந்தது.
ஏனைய போட்டிகளில் லெய்செஸ்டர், 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டேன்ஹாமை தோற்கடித்திருந்ததோடு, சௌதாம்டன், 2-0 என்ற கோல் கணக்கில் வட்போர்ட்டை தோற்கடித்ததோடு, ஸ்டோக், 3-1 என்ற கோல் கணக்கில் நோர்விச்சை தோற்கடித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .