2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ஆர்சனலை வென்றது செல்சி

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 25 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (24), இடம்பெற்ற போட்டிகளில், செல்சி, சுவான்சீ ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

செல்சி, ஆர்சனல் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் செல்சி, 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியில் பெறப்பட்ட கோலை, 23ஆவது நிமிடத்தில் செல்சியின் நட்சத்திர வீரர் டியகோ கோஸ்டா பெற்றிருந்தார். இப்போட்டியின் நாயகனாக செல்சியின் வில்லியன் தெரிவாகியிருந்தார்.

இப்போட்டியின், 18ஆவது நிமிடத்தில் வேகமாக கோஸ்டா முன்னேறிக்கொண்டிருந்தபோது, ஆர்சனலின் தடுப்பாட்டக்காரர் பியர் மேர்ட்டுஸாக்கரினால் வீழ்த்தப்பட்டபோது, மேர்ட்டுஸாக்கருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் 10 பேருடன் வெளியேறிய ஆர்சனலுக்கு, 22ஆவது நிமிடத்தில் முன்கள வீரர் ஒலிவர் ஜிரோட்டினை, தடுப்பாட்டக்காரர் கப்ரியலை பிரதீயீடு செய்யும் பயிற்சியாளர் ஆர்சன் வெங்கரின் முடிவினால், ஆர்சனலால் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது.

தற்போதைய பிறீமியர் லீக் சம்பியனான செல்சி, இப்பருவகாலத்தில் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்த நிலையில், கடந்த 7 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 4 சமநிலை முடிவுகளையும் பெற்றுள்ளது. தவிர, ஆர்சனலுடனான இறுதி 9 மோதல்களில் 6 வெற்றிகளையும் 3 சமநிலை முடிவுகளையும் கொண்டுள்ளது.  

இந்தப் போட்டியில் வெற்றி பெறத் தவறியதன் மூலம், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு செல்லும் வாய்ப்பை இழந்த ஆர்சனல், 44 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கின்றது. எனினும் இப்போட்டியில் 57ஆவது நிமிடத்தில் அலெக்ஸிஸ் சந்தேஸ் களமிறங்கியதன் மூலம் எதிர்வரும் போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகளை கொண்டுள்ளது.

இதேவேளை, சுவான்சீ, எவெர்ற்றன் அணிகளுக்கிடையிலான போட்டியில், சுவான்சீ, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .