Shanmugan Murugavel / 2016 மே 12 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரின் கடந்த புதன்கிழமை (11) இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், செல்சி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், நோர்விச், சந்தர்லேண்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
லிவர்பூல், செல்சி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் செல்சி சார்பாக ஈடின் ஹஸார்ட்டும் லிவர்பூல் சார்பாக கிறிஸ்டியான் பென்டிகேயும் கோல்களைப் பெற்றிருந்தனர்.
தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரராக கடந்த வருடம் தெரிவான ஹசார்ட், இவ்வருடம், காயங்களாலும் சிறப்பான திறமை வெளிப்பாடு இல்லாமல் தடுமாறி வந்த நிலையில், இப்போட்டியுடன் சேர்த்து இறுதியாக இடம்பெற்ற நான்கு போட்டிகளில் நான்கு கோல்களைப் பெற்று போர்முக்கு திரும்பியுள்ளார்.
எவ்வாறெனினும் கடந்த வருட பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சி, இவ்வருடத்தின் தனது இறுதிப் போட்டியில் இவ்வருட சம்பியன்களான லெய்செஸ்டரை எதிர்கொள்ளவுள்ள நிலையில், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 49 புள்ளிகளைப் பெற்று 9ஆவது இடத்தில் காணப்பெற்று சம்பியன்ஸ் லீக் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
மறுகணத்தில், 59 புள்ளிகளுடன் பிறீமியர் லீக் தரவரிசையில் 8ஆவது இடத்தில் காணப்படும் லிவர்பூல், வெஸ்ட் புரோமுடனான தனது இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றாலும் அதிகபட்சமாக 6ஆம் இடத்துக்கே செல்ல முடியும் என்றாலும் எதிர்வரும் 18ஆம் திகதி செவில்லாவுடனான ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் சம்பியன்ஸ் லீக் தகுதியைப் பெற முடியும்.
இதேவேளை, அன்று இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், வட்போர்ட்டை 2-4 என்ற கோல்கணக்கில் நோர்விச் தோற்கடித்ததுடன், எவெர்ற்றனை 3-0 என்ற கோல்கணக்கில் சந்தர்லேண்ட் தோற்கடித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .