2025 ஜூலை 05, சனிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: வெஸ்ட் ஹாமிடம் தோற்றது யுனைட்டெட்

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.

இப்போட்டியின் முதற்பாதியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரர் நெமஞ்சா மட்டிக், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் அணித்தலைவரும் முன்களவீரருமான மார்க் நோபிள் ஆகியோர் நீண்ட தூரத்திலிருந்து கோல் பெற முயன்ற முயற்சிகள் தடுக்கப்பட்ட நிலையில், முதற்பாதி முவடையும் நேரத்தில் சக முன்களவீரர் பிலிப் அன்டர்சன் வழங்கிய பந்தை வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் முன்களவீரரான அன்ட்ரி யர்மொலெங்கோ கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது.

பின்னர், இரண்டாவது பாதியில் சக முன்களவீரர் அன்ட்ரயாஸ் பெரைரா வழங்கிய சிறப்பான பந்தின் மூலம் கோல் பெறும் அருமையான வாய்ப்பை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான ஜுவான் மாத்தா தவறவிட்டதோடு, அவ்வணியின் மத்தியகளவீரரான ஸ்கொட் மக்டொமினியின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், பின்களவீரர் ஹரி மக்குவாயாவின் உதையை வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் லூகாஸ் ஃபபியான்ஸ்கி தடுத்திருந்தார்.

இந்நிலையில், போட்டியின் 84ஆவது நிமிடத்தில் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் பின்களவீரர் ஆரோன் கிரஸ்வெல் பிறீ கிக் மூலம் அபாரமாகப் பெற்ற கோலோடு இறுதியில் அவ்வணி 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட்டை வென்றிருந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற லிவர்பூலுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது. லிவர்பூல் சார்பாக, ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்ட், றொபேர்ட்டோ ஃபெர்மினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை என்கலோ கன்டே பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அஸ்டன் வில்லாவுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, நிக்கொலஸ் பெப்பே, கலும் சேம்பர்ஸ், பியரி-எம்ரிக் அபுமெயாங்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். அஸ்டன் வில்லா சார்பாக, ஜோன் மக்கின், வெஸ்லி மொராயஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .