Shanmugan Murugavel / 2016 ஜூன் 04 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைத் தேர்வாளரும் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரருமான சந்தீப் பட்டேல், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் தலைமைத் தேர்வாளராக கடமையாற்றுகின்ற சந்தீப் பட்டேலின் பதவி, எதிர்வரும் செப்டெம்பருடன் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், பெங்களூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகடமியின் தவிசாளராக கடமையாற்றிய சந்தீப் பட்டேல், கென்யா மற்றும் ஓமான் அணிகளையும் பயிற்றுவித்திருந்ததுடன், அதற்கு முன்னதாக 1996ஆம் ஆண்டு இந்திய அணியையும் பயிற்றுவித்திருந்தார். எனினும் இந்திய அணியின் பயிற்சியாளராக ஆறு மாதத்திலேயே மதன் லாலால் பிரதியீடு செய்யப்பட்டிருந்தார்.
எவ்வாறெனினும் சந்தீப் பட்டேல் பயிற்சியாளராக இருந்தபோது, 2003 உலகக் கிண்ண அரையிறுதிக்கு கென்யா தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு மே மாதம், இந்திய கிரிக்கெட் சபையினால், பயிற்சியாளர் பதவிக்கு சிறுபட்டியலிடப்பட்ட நான்கு பேரில் ஒருவராக சந்தீப் பட்டேல் இருந்தபோதும், ஒமானுடன் கொண்டிருந்த கடமைப்பாடுகள் காரணமாக பதவியை நிராகரித்திருந்தார்.
1980ஆம் ஆண்டிலிருந்து 1986வரை இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளிலும் 45 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றிய சந்தீப் பட்டேல், 1983ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற குழாமிலும் இடம்பிடித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .