Shanmugan Murugavel / 2016 மே 10 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மைக்கல் பிளட்டினி கால்பந்தாட்டத்தில் கொண்டுள்ள 6 வருடத் தடையானது நீக்கப்படாததைத் தொடர்ந்து, ஐரோப்பியா கால்பந்தாட்ட ஆளும் உடலான ஐரோப்பிய கால்பந்தாட்டக் கூட்டமைப்புகளின் சங்கத்திலிருந்து அதன் தலைவர் மைக்கல் பிளட்டினி இராஜினாமாச் செய்யவுள்ளார்.
எனினும் விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பாய நீதிமன்ற குழு, தடையை நான்கு வருடங்களாக கடந்த திங்கட்கிழமை (09) குறைத்துள்ளது. மேற்படி தீர்ப்பினையடுத்தே, சுவிஸ் நீதிமன்றங்களில் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்காக தான் பதவி விலகவுள்ளதாக 60 வயதான பிளட்டினி தெரிவித்துள்ளார்.
தவறான முறையில் செலுத்தப்பட்ட 2 மில்லியன் ஸ்விஸ் பிராங் கட்டணம் தொடர்பாக நெறிமுறைகளை மீறியதாக பிளட்டினியும் முன்னாள் பீபா தலைவரான செப் பிளாட்டரும் கடந்த வருடம் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என இருவரும் தெரிவித்திருந்த நிலையில், அவர்களின் தடைகள் எட்டு வருடத்திலிருந்து ஆறு வருடமாக பீபா முறையீட்டுச் சபையினால் குறைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, தடையை இல்லாமற் செய்யும் பொருட்டே மேற்படி வழக்கினை விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பாய நீதிமன்றத்துக்கு பிளட்டினி எடுத்துச் சென்ற நிலையில், கட்டணத்தின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் அங்கிருந்த மூவர் கொண்ட குழு திருப்திப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், அடுத்த நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்ததோடு, அதுவரையிலான காலத்தில் இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படமாட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .