Shanmugan Murugavel / 2016 ஜூன் 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி, இறுதிப் பந்தில் லியம் பிளங்கட்டினால் பெறப்பட்ட ஆறு (சிக்ஸ்) ஓட்டங்களின் துணையோடு, சமநிலையில் முடிவடைந்தது. போட்டியில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி, வெற்றியைக் கைநழுவவிட்டது.
நொட்டிங்காமில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மத்தியூஸ் 73 (109), சீக்குகே பிரசன்ன 59 (28), டினேஷ் சந்திமால் 37 (56), பர்வீஸ் மஹ்ரூப் ஆட்டமிழக்காமல் 31 (30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, லியம் பிளங்கட் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் 82 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. எனினும், 7ஆவது விக்கெட்டுக்காக கிறிஸ் வோக்ஸ், ஜொஸ் பட்லர் இருவராலும் 138 ஓட்டங்கள் பகிரப்பட்டன. எனினும், 45.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களுடன் அவ்வணி தடுமாறிய போது, 26 பந்துகளில் 51 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
இறுதி ஓவரில் வெற்றிக்கு 14 ஓட்டங்களும் சமநிலைக்கு 13 ஓட்டங்களும் தேவைப்பட, அந்த ஓவரை வீசிய நுவான் பிரதீப், முதல் 5 பந்துகளில் 7 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்தார். ஆனால், இறுதிப் பந்தில் பிளங்கட் அடித்த ஆறு ஓட்டங்களால், போட்டி சமநிலையானது.
துடுப்பாட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 95 (92), ஜொஸ் பட்லர் 93 (99), ஒய்ன் மோர்கன் 43 (49), லியம் பிளங்கட் ஆட்டமிழக்காமல் 22 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அஞ்சலோ மத்தியூஸ், நுவான் பிரதீப், சுரங்க லக்மால் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, கிறிஸ் வோக்ஸ் தெரிவானார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026