2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இலங்கைக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடருக்கான இலங்கைக் குழாமை, இலங்கை கிரிக்கெட் அணியின் தேசிய தெரிவாளர்கள் பெயரிட்டுள்ளனர். லசித் மலிங்கவின் தலைமையில், 15 பேர் கொண்ட குழாமே அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்காக உபாதை காரணமாக சேர்க்கப்பட்டிருக்காத லசித் மலிங்க, அஞ்சலோ மத்தியூஸ், ரங்கன ஹேரத், நுவான் குலசேகர ஆகியோருக்கு, எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே இக்குழாமில் இடம் கிடைத்துள்ளது. தவிர, ஷெஹான் ஜயசூரியவுக்கும் இக்குழாமில் இடம் கிடைத்துள்ளது.

அத்தொடருக்கான ஆரம்பக் குழாமில் அறிவிக்கப்படாமல், திலகரட்ண டில்ஷானின் காயம் காரணமாக குழாமில் சேர்க்கப்பட்ட நிரோஷன் டிக்வெல்ல, குழாமில் தொடர்ந்து நீடிக்கிறார். அத்தொடரில் இடம்பெற்ற கசுன் ரஜித்த, தனுஷ்க குணதிலக, அசேல குணரட்ண, சீக்குகே பிரசன்ன, டில்ஹார பெர்ணான்டோ ஆகியோருக்கு, இக்குழாமில் இடம் கிடைக்கவில்லை. உபாதை காரணமாக அத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்ணான்டோவுக்கும், குழாமில் இடம் கிடைக்கவில்லை.

இதில், தனக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பில், டில்ஹார பெர்ணான்டோ சிறப்பாகச் செயற்பட்டிருந்ததோடு, விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில், கசுன் ரஜித்த சிறப்பாகச் செயற்பாட்டு, போட்டியின் நாயகன் விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழாம்: லசித் மலிங்க, அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், திலகரட்ண டில்ஷான், நிரோஷன் டிக்வெல்ல, ஷெஹான் ஜயசூரிய, மிலிந்த சிரிவர்தன, தசுன் ஷானக, சாமர கப்புகெதர, நுவான் குலசேகர, துஷ்மந்த சமீர, திஸர பெரேரா, சச்தித்திர நேனநாயக்க, ரங்கன ஹேரத், ஜெப்றி வன்டர்சே.

அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாமே, ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்குமான குழாமாக அமையவுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும், மார்ச் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரிலும், இலங்கை அணியே நடப்புச் சம்பியன்களாக உள்ளமை, இலங்கை அணி மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .