2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கை எதிர் பாகிஸ்தான்: ODI தொடர் இன்று ஆரம்பிக்கின்றது

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI)) தொடரானது, கராச்சியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இத்தொடரையும், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரையும் உள்ளடக்கிய இந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து, இலங்கையணியின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிக்கான தலைவர் திமுத் கருணாரத்ன, முன்னாள் தலைவர்கள் அஞ்சலோ மத்தியூஸ், லசித் மலிங்க தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால், திஸர பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய ஆகியோர் விலகியபோதும் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து இலங்கையணி மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர் அங்கு நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்நிலையில், குறித்த வீரர்கள் இல்லாத நிலையில் அவர்கள் மீண்டும் வரும்போதும் தமது இடங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இலங்கையின் இத்தொடருக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான அணியின் தலைவர் லஹிரு திரிமான்ன, இளம் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் சதீர சமரவிக்கிரம, மினோத் பானுக, ஒஷாட பெர்ணான்டோ, அஞ்சலோ பெரேரா உள்ளிட்டோர் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியவர்களாக உள்ளனர்.

பந்துவீச்சுப் பக்கம் இலங்கையை அண்மைய காலத்தில் வழிநடத்த வேண்டியவர்களின் முதன்மையானவராகக் காணப்படும் நுவான் பிரதீப்பின் தலைமையில் இசுரு உதான, கசுன் ராஜித, லஹிரு குமார என ஓரளவுக்கு செயற்படக்கூடிய குழாமாகவே காணப்படுவதுடன், லக்‌ஷன் சந்தகான், வனிடு ஹசரங்கவின் தொடர்ச்சியான பங்களிப்புகளும் இருக்குமிடத்து பாகிஸ்தானுக்கு சவாலை வழங்கலாம்.

மறுபக்கமாக, பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் இமாம்-உல்-ஹக், பாபர் அஸாம், ஹரீஸ் சொஹைல் என தொடர்ச்சியாக பெறுபேறுகளை வெளிப்படுத்தக்கூடியவர்களுடன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும் ஃபக்கர் ஸமன், ஆசிஃப் அலி, மொஹமட் றிஸ்வான், சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரர்களான இமாட் வசீம், மொஹமட் நவாஸ், ஷடாப் கான் என பலமாகவே காட்சியளிக்கின்றது.

அந்தவகையில் துடுப்பாட்டவரிசை இவ்வாறாக பலமாகக் காணப்படுகின்ற நிலையில், மேற்கூறப்பட்ட சகலதுறைவீரர்களான மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் மொஹமட் ஆ,மிர், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் றியாஸ், மொஹமட் ஹஸ்னைன் என பந்துவீச்சுக் குழாமும் அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் ஆறாமிடத்தில் பாகிஸ்தானும், எட்டாமிடத்தில் இலங்கையும் காணப்படுகின்ற நிலையில் இத்தொடரின் எந்தவொரு முடிவும் தரவரிசையில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .