Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 ஒக்டோபர் 18 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரினை அதிர்ச்சி தோல்வியுடன் ஆரம்பித்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, தமக்கு எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம், ஐக்கிய அரபு இராச்சியத்தினை கீலோங் நகரில் வைத்து இன்று எதிர்கொள்கின்றது.
T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் ஆசியக் கிண்ண சம்பியன்களுக்கு நமீபிய அணி அதிர்ச்சி வைத்தியம் செய்யும் என எவரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் நமீபிய அணியுடனான தோல்வி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டிய விடயங்களை இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டியிருக்கின்றது.
போட்டியின் முதல் 15 ஓவர்களிலும் திறமையாக செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸின் பிந்திய ஓவர்களில் வெளிப்படுத்திய மோசமான ஆட்டமே தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது.
ஆசியக் கிண்ணத் தொடரிலும் இந்தப் பிரச்சினை இலங்கை கிரிக்கெட் அணிக்கு இருந்த போதிலும் இறுதிப் போட்டியில் சரியான முகாமை தொடரின் வெற்றியாளர்களாக இலங்கை கிரிக்கெட் அணியினை மாற்றியிருந்தது.
துடுப்பாட்ட வரிசையை பார்க்கும்போது கடந்த நான்கு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த தனுஷ்க குணத்திலக்கவிற்கு நமீபியாவுடனான போட்டியில் ஏன் வாய்ப்பளிக்கப்பட்டது என்ற கேள்வி இங்கு எழாமல் இல்லை.
வேகப்பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ளும் துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக குணத்திலக்க இருந்த போதும் அவர் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தும் நிலையில் இல்லை.
எனவே அவரின் இடத்தினை சரித் அசலன்கவினை வைத்து பரிசோதித்து பார்க்க முடியும். சரித் அசலன்க ஆசியக் கிண்ணத் தொடரில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாது போயினும் கடந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக காணப்படுகின்றார்.
ஆனால் இலங்கை அணியின் களத்தடுப்பு பாராட்டப்பட வேண்டிய விடயம். நமீபிய அணியுடனான மோதலில் இலங்கை அணியினர் அசாத்தியமான களத்தடுப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதன்படி இலங்கை அணிக்கு இன்று இடம்பெறலுள்ள போட்டி முக்கியமானது என்பதால் கட்டாய வெற்றி ஒன்றினை பெற 100% பங்களிப்பை அனைத்து துறைகளிலும் இலங்கை வீரர்கள் வழங்க வேண்டும்.
ஐக்கிய அரபு இராச்சிய அணி
ஐக்கிய அரபு இராச்சிய அணியினை பொருத்த வரையில், இலங்கையை போன்றே முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியினைத் தழுவியது.
எனினும், ஐக்கிய அரபு இராச்சிய அணி தமது முதல் போட்டியில் சிறந்த பந்துவீச்சினை இறுதி நேரம் வரை வெளிப்படுத்தியிருந்தது.
அத்துடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியிலும் சிறந்த பந்துவீச்சினை அவ்வணி வீரர்கள் வெளிக்காட்டியிருந்தனர்.
எனவே தமது பந்துவீச்சை இன்னும் பலப்படுத்தும் போது ஐக்கிய அரபு இராச்சிய அணி இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் ஒரு அணியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
மறுமுனையில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கும் இன்றைய போட்டி மிக முக்கியமானதொன்றதாக இருக்கின்றது. இலங்கையுடன் தோல்வியினைத் தழுவும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தொடரில் இருந்து வெளியேறுகின்ற நிலையும் ஏற்படலாம். எனவே அவர்களும் வெற்றிக்காக அதிகூடிய முயற்சியினை வழங்குவார்கள் என்றே எதிர்பார்க்கலாம்.
உத்தேச இலங்கை அணி
உத்தேச இலங்கை அணியை பொருத்த வரையில் தசுன் ஷானக்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுசான் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உத்தேச ஐக்கிய அரபு இராச்சிய அணி
உத்தேச ஐக்கிய அரபு இராச்சிய அணியை பொருத்த வரையில் பெரும்பாலும் நெதர்லாந்து அணியினை எதிர்கொண்ட அதே அணியே இலங்கை மோதலிலும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிராக் சூரி, முஹமட் வஸீம், காசிப் தாவூத், அரவிந்த், சவார் பரீட், பாசில் ஹமீட், சுண்டன்காபொயில் ரிஸ்வான், அப்சல் கான், கார்த்திக் மெய்யப்பன், ஜூனைட் சித்திக், ஸஹூர் கான் ஆகியோர் அணிக்காக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
13 minute ago
39 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
51 minute ago