Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 01 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது நாள் போட்டிகளில், உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், ஒன்பதாம் நிலை வீரரான குரோஷியாவின் மரீன் சிலிச், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான அங்கெலிக் கேபர், எட்டாம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ரொபேர்ட்டா வின்சி, ஒன்பதாம் நிலை வீராங்கனையான மடிஸன் கீஸ் ஆகியோர் தமது இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்களில், நடால், 6-0, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அன்றீயாஸ் செப்பியையும், மரீன் சிலிச், 6-1, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் உக்ரேய்னின் சேர்ஜி ஸ்டக்கொவோஸ்கியையும் தமது இரண்டாவது சுற்றுக்களில் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார். உலகின் முதல் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச்சின் இரண்டாவது சுற்றுப் போட்டியாளரான செக் குடியரசின் ஜிரி வெஸலி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, நேரடியாக மூன்றாவது சுற்றுக்கு ஜோக்கோவிச் தகுதி பெற்றார்.
இது இவ்வாறிருக்கையில், உலகின் ஆறாம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் றாவோனிச், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 7-6, 5-7, 5-7, 1-6 என்ற செட் கணக்கில், உலகின் 120ஆம் நிலை வீரரான ஐக்கிய அமெரிக்காவின் றயான் ஹரிஸனிடம் அதிர்ச்சித் தோல்வியுற்று, தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, பிரான்ஸின் ஜோ வில்ஃபிறைட் சொங்கா, கயேல் மொன்ஃபில்ஸ் ஆகியோரும் தமது இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
பெண்களில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸா, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 7-5, 6-4 என்ற செட் கணக்கில், உலகின் 48ஆம் நிலை வீராங்கனையான லத்தீவியாவின் அனஸ்டஸ்ஜியா செவஸ்டோவாவிடம் அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினார். தவிர, முன்னாள் முதல் நிலை வீராங்கனையும் தற்போது 74ஆவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 10ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் ஸ்வெட்னா குஸ்னெட்சோவாவைத் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
கேபர், 6-2, 7-6 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மிர்ஜானா லூசிக்-பரோனியையும், ரொபேர்ட்டா வின்சி, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் கிறிஸ்டினா மக்கேலியைத் தோற்கடித்தும் மடிஸன் கீஸ், 6-1, 6-1 என்ற செட் கணக்கில், சக அமெரிக்க வீராங்கனையான கைலா டேயையும் தமது இரண்டாவது சுற்றுக்களில் தோற்கடித்து, மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
இதேவேளை, ஸ்லோவாக்கியாவின் டொமினிக்கா சிபுல்கோவா, பிரித்தானியாவின் ஜொஹன்னா கொன்டா, செக் குடியரசின் பெற்றா கிவிட்டோவா, சுவிற்ஸர்லாந்தின் பெலிந்தா பெனிச் ஆகியோரும் இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இரட்டையர் போட்டிகளின் முதலாவது சுற்றில், இந்தியாவின் சானியா மிர்ஸா வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago