Shanmugan Murugavel / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து றக்பி அணியின் தலைவர் றிச்சி மக்கோ, றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். வெலிங்டனில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, இந்த அறிவிப்பை அவர் விடுத்தார்.
34 வயதான றிச்சி மக்கோ, றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் ஓய்வுபெற விரும்புவதான கருத்தை, அவர் வெளியிட்டிருந்தார். அத்தோடு, 2016ஆம் ஆண்டின் சுப்பர் றக்பி தொடருக்கான கிறசடேர்ஸ் அணியிலும் அவர் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, தனது ஓய்வை அவர் உறுதிப்படுத்தினார்.
உலக றக்பி வரலாற்றில், அதிக சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான மக்கோ, 148 போட்டிகளில் பங்குபற்றியிருந்தார். அத்தோடு, தனது 23 வயதில், நியூசிலாந்தின் இளைய அணித் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
2001ஆம் ஆண்டு, அயர்லாந்து அணிக்கெதிராக தனது சர்வதேச றக்பி விளையாட்டுக் காலத்தை ஆரம்பித்த மக்கோ, கடந்த மாதம் இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், இறுதியாகப் பங்குபற்றினார். இதன்மூலம், 14 வருடங்கள், சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தார். அவரது இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்று, உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.
இறுதி நேரத்தில் தடுமாற விரும்பியிருக்கவில்லை எனத் தெரிவித்த மக்கோ, ஓய்வுபெறும் நேரத்தைச் சரியாகக் கணிப்பிட்டுள்ளதாக நினைப்பதாகத் தெரிவித்தார்.
தன்னால் எண்ணியிருக்கக்கூடிய எல்லா விடயங்களையும் அடைந்திருப்பதாகத் தெரிவித்த மக்கோ, அதனைத் தொடர்ந்து ஓய்வுபெறுவதாகத் தெரிவித்தார். 'நியூசிலாந்து அணி, உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கு உதவினேன் என்பதை அறிந்துகொண்டு, அந்தத் திருப்தியோடு நான் ஓய்வுபெறுகிறேன்" என அவர் தெரிவித்தார்.
நியூசிலாந்தின் றக்பி ஜாம்பவான ஜோனோ லொமு, கடந்த புதன்கிழமை உயிரிழந்து, நியூசிலாந்து நாடு முழுவதுமே சோகமயமாகக் காணப்படும் நிலையிலேயே, மக்கோவின் ஓய்வுச் செய்தியும் கிடைத்துள்ளது.
தனது ஓய்வு அறிவிப்பின்போது, ஜோனோ லொமுவுக்கும் தனது புகழ்ச்சியை வெளியிட்டதோடு, தனது எண்ணங்களும் அனுதாபங்களும், அவரது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் செல்வதாகவும் மக்கோ குவிப்பிட்டார்.
21 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
48 minute ago
54 minute ago