2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

காயமடைந்தார் தம்மிக்க பிரசாத்

Shanmugan Murugavel   / 2016 மே 10 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை டெஸ்ட் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான தம்மிக்க பிரசாத், இங்கிலாந்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பயிற்சிப் போட்டியின் போது காயமடைந்துள்ளார். இது, இலங்கை அணிக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8ஆம் திகதி ஆரம்பித்து இன்றுடன் முடிவடைந்த, எசெக்ஸ் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியின் இரண்டாவது நாளிலேயே, அவர் இவ்வாறு காயமடைந்தார்.

இப்போட்டியில் 17.3 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசிய தம்மிக்க பிரசாத், அந்த ஓவரின் நடுவே வெளியேறினார். அவரது தோட்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இவ்வாறு வெளியேறினார். அவரது ஓவரை, திமுத் கருணாரத்னவே பூர்த்தி செய்தார்.

ஏற்கெனவே, கடந்தாண்டு இறுதியில், நியூசிலாந்துக்கெதிரான தொடரின்போது ஏற்பட்ட முதுகு உபாதை காரணமாகப் பல போட்டிகளைத் தவறவிட்டிருந்த தம்மிக்க பிரசாத், அதன் பின்னர் இத்தொடரிலேயே சேர்க்கப்பட்டிருந்தார்.

பிரசாத்தின் உபாதை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா, அவருக்கு ஏற்பட்டிருப்பது தோட்பட்டை வலியே எனத் தெரிவித்தார். எனினும், அவரது தோட்பட்டையில் ஸ்கான் சோதனை செய்யப்படுமென்பதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

'அவர் எங்களுக்கு முக்கியமான பந்துவீச்சாளர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்கள் அணியின் தலைமைப் பந்துவீச்சாளராக உள்ளார். இங்கிலாந்துக்கெதிரான கடந்த தொடரின்போது, போட்டியை மாற்றியவரும் அவரே. ஆகவே, எங்களது பந்துவீச்சு வரிசையில், அவர் முக்கியமான நபர்" எனக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், 2014ஆம் ஆண்டில் இலங்கை அணி இங்கிலாந்துக்குச் சென்றிருந்த போது, முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிய, இரண்டாவது போட்டியின் இரண்டாவது இனிங்ஸில், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரசாத், இலங்கை அணி வெற்றிபெற வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .