Shanmugan Murugavel / 2016 மே 16 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கும் போர்ன்மெத் அணிக்குமிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த போட்டி, குண்டு பற்றிய எச்சரிக்கை காரணமாகப் பிற்போடப்பட்டு, அப்போட்டி இன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.
ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கின் வடமேற்கு மூலையில், கூட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரொருவர், சந்தேகத்துக்கிடமான வகையில், எரிபொருள் குழாய்களோடு அலைபேசியொன்று கட்டப்பட்டுக் காணப்படுவதைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்தே, இந்தக் குழப்பம் ஏற்பட்டது.
குறித்த பொருள், குண்டு போன்றதொரு அமைப்பில் காணப்பட்டதால், இலங்கை நேரப்படி இரவு 9.30க்கு ஆரம்பிக்க வேண்டிய போட்டிக்கு, 9.10 மணியளவில், எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, வீரர்கள் சிலர், பயிற்சிகளில் ஈடுபடவும் ஆரம்பித்திருந்தனர்.
எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரசிகர்களும் வீரர்களும் விளையாட்டரங்கை விட்டு வெளியேற்றப்பட்டதோடு, கட்டுப்பாட்டு ரீதியில், சோதனையாக அந்தப் பொருள் வெடிக்க வைக்கப்பட்டது. அப்போது அது, பொய்க் குண்டு எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த விளையாட்டரங்கில், நான்கு தினங்களுக்கு முன் இடம்பெற்ற பாதுகாப்பு ஒத்திகைக்காகப் பயன்படுத்தப்பட்ட குறித்த பொய்க் குண்டை, தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று அங்கு விட்டுவிட்டுச் சென்றமையே, இந்தக் குழப்பங்களுக்குக் காரணமாக அமைந்தது.
இதன்காரணமாக, 75,600 ஆசனங்களைக் கொண்ட இந்த விளையாட்டரங்கிலிருந்து, ஏமாற்றத்துடன் இரசிகர்கள் வெளியேறினர். இதில், 800க்கும் அதிகமான கிலோமீற்றர்கள் பயணஞ்செய்து, இப்போட்டியைப் பார்வையிட வந்திருந்த ஏறத்தாழ 3,500 போர்ண்மெத் இரசிகர்கள், அதிகமாக ஏமாந்தனர்.
இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்ற அனைவருக்கும், அதற்கான பணம் திரும்ப வழங்கப்படுமெனவும், அத்தோடு,நாளை இடம்பெறவுள்ள போட்டிக்கான நுழைவுச்சீட்டு, அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவாக, 3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் அமையுமெனக் கருதப்படுகிறது.
இவ்வாறு இரசிகர்கள் வெளியேற்றப்பட்டமையை, ஏற்றுக்கொள்ள முடியாதது எனத தெரிவித்துள்ள மன்செஸ்டர் பெருநகர்ப் பகுதியின் மேயர், இதுகுறித்து முழுமையான விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .