Shanmugan Murugavel / 2016 மே 09 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் இடம்பெற்ற 22ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது, ரஷ்ய ஒலிம்பிக் வீர, வீராங்கனைகளால் ஊக்கமருந்துப் பாவனை மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவினால் மேற்கொள்ளப்படும் ஊக்கமருந்து மோசடிகள் தொடர்பாக அண்மையில் வெளியான தகவல்களை வெளியிட உதவிய ரஷ்யாவின் ஊக்கமருந்துக்கெதிரான அமைப்பின் முன்னாள் ஊழியரான விட்டலி ஸ்டெபனோவ் என்பவரே, தற்போது இந்தத் தகவலையும் வெளியிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஊக்கமருந்தைப் பயன்படுத்தியவர்களை, ரஷ்யாவின் ஊக்கமருந்துக்கெதிரான ஆய்வுகூடத்தின் தலைவரான கிரிகோரி றொட்சென்கோவ், மறைத்ததாகவே தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் அரச அதிகாரிகள், ஊக்கமருந்து தொடர்பான அத்தனை விடயங்களிலும் தலையிட்டு, அவற்றைக் கட்டுப்படுத்த முயன்றதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது இக்குற்றச்சாட்டுத் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சர் விட்டலி முட்கோ, ரஷ்யாவின் வீரர்கள், இவ்வாறு ஊக்கமருந்தைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு வெறுமனே ஓர் ஊகம் மாத்திரமே என்றார்.
விட்டலி ஸ்டெபனோவும் அவரது மனைவியும் தடை செய்யப்பட்ட தடகள வீராங்கனையுமான யூலியா ஸ்டெபனோவும் இணைந்து, ஜேர்மன் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே, ரஷ்யாவின் ஊக்கமருந்து தொடர்பான மோசடிகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .