Shanmugan Murugavel / 2016 ஜூன் 05 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதற்தர வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸை நேர் செட்களில் தோற்கடித்த உலகின் நான்காம் நிலை வீராங்கனையான கர்பினியே முகுருஸா, பிரெஞ்சுப் பகிரங்கப் பட்டத்தை, தனது முதலாவது கிரான்ட் ஸ்லாம் பட்டமாக கைப்பற்றினார்.

கடந்த வருட விம்பிள்டன் இறுதிப் போட்டியில் செரீனாவிடம் தோல்வியுற்றமைக்கு பழி தீர்த்துக் கொண்ட முகுருஸா, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் செரினாவை வீழ்த்தினார்.
1998ஆம் ஆண்டு அரன்ட்ஸ்கா சந்தேஸ்-விகாரியோ பிரெஞ்சுப் பகிரங்கப் பட்டத்தை வென்ற பின்னர், பிரெஞ்சுப் பகிரங்கப் பட்டத்தை வென்ற முதலாவது ஸ்பானிய வீராங்கனையாக 22 வயதான முகுருஸா சாதனை படைத்துள்ளார்.
இதனையடுத்து, ஸ்டெஃபி கிராஃபின் 22 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை, பகிரங்கப் போட்டிகளில் வென்ற சாதனையை சமப்படுத்துவதற்கு, 34 வயதான செரினா, இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், கருத்து தெரிவித்த முகுருஸா, சிறந்த வீராங்கனையொருவருக்கெதிராக கிரான்ட் ஸ்லாமில் விளையாடியமை, மிக மிக உற்சாகம் எனத் தெரிவித்த அவர், இது சிறந்த இறுதிப் போட்டி என்று தெரிவித்ததுடன், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாவும், தன்னால் முடிந்தளவுக்கு போராடுவதற்காக, அனைத்து புள்ளிகளிலும், மிகவும் தயாராக மற்றும் கவனஞ் செலுத்தி இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். தவிர, செரினாவுக்கெதிராக தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளும் உதவியதாகவும், இது சிறந்த இறுதிப் போட்டியெனவும் தெரிவித்த முகுருஸா, பிரெஞ் பகிரங்கத் தொடர், ஸ்பெயினில் விருப்பத்துக்குரிய தொடரெனவும், தான், தனது அனைத்து ஸ்பானிய இரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார்.
தனது 27ஆவது கிரான்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில், ஆறாவது தடவையாக, இந்த முறை செரினா தோல்வியடைந்திருந்தபோதும், தனது காயங்களை, தோல்விக்கான காரணமாக காட்டியிருக்கவில்லை.

இப்போட்டியுடன், தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கிரான்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த செரினா, இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள விம்பிள்டனில், தனது பட்டத்தை தக்கவைத்து 22ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஆண்களுக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில், தரவரிசையில் மூன்றாமிடத்திலுள்ள ஐக்கிய அமெரிக்காவின் பொப் பிரயன், மைக் பிரயன் ஜோடியை, 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்த தரவரிசையில் 12ஆவது இடத்திலுள்ள பெலிசியானோ லோபேஸ், மார்க் லோபேஸ் ஜோடி பட்டம் வென்றது.

இந்நிலையில் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்ஸா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடியை 4-6, 6-4, 10-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்த சுவிற்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி பட்டத்தைக் கைப்பற்றியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .