2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

சிற்றி, யுனைட்டெட் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில், கடந்த செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட், லெய்செஸ்டர், டொட்டேன்ஹாம், வெஸ்ட் ஹாம், பௌர்ண்மவுத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன், ஆர்சனல், சௌதாம்டன் அணிகளுக்கிடையிலான போட்டியும் வெஸ்ட்புரோம், சுவான்சீ ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.

மன்செஸ்டர் சிற்றி, சந்தர்லேண்ட் அணிகளுக்கிடையிலான போட்டியில், மன்செஸ்டர் சிற்றி, 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை, 16ஆவது நிமிடத்தில் சிற்றியின் சேர்ஜியோ அக்ரோ பெற்றிருந்தார். இந்த வெற்றியையடுத்து, 47 புள்ளிகளுடன் பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் சிற்றி இரண்டாம் இடத்தை வகிக்கின்றது.

இதேவேளை, மன்செஸ்டர் யுனைட்டெட், ஸ்டோக் சிற்றி அணிகளுக்கிடையிலான போட்டியில், மன்செஸ்டர் யுனைட்டெட், 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், 14ஆவது நிமிடத்தில் ஜெஸி லிங்கார்ட்டும் 23ஆவது நிமிடத்தில் அந்தோனி மார்ஷியலும் 53ஆவது நிமிடத்தில் வெய்ன் ரூனியும் யுனைட்டெட்டுக்காக கோல்களைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், லெய்செஸ்டர், லிவர்பூல் அணிகளுக்கிடையிலான போட்டியில், லெய்செஸ்டர், 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் போட்டியின் 60ஆவது, 71ஆவது நிமிடத்தில் லெய்செஸ்டரின் ஜெமி வர்டி பெற்றார்.

இதேவேளை, ஆர்சனல், சௌதாம்டன் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாதநிலையில் சமநிலையில் முடிவடைந்தது. இதனால், கடந்த நான்கு போட்டிகளில் வெற்றி பெறத்தவறியுள்ள ஆர்சனல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் நான்காம் இடத்துக்குச் சென்றுள்ளது. முதலாவது இடத்திலுள்ள லெய்செஸ்டர் 50 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், அவ்வணியை விட ஐந்து புள்ளிகள் குறைவாக ஆர்சனல் பெற்றுள்ளது.

இந்நிலையில், இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், டொட்டேன்ஹாம், 3-0 என்ற கோல்கணக்கில் நோர்விச்சை தோற்கடித்ததுடன், வெஸ்ட் ஹாம், 2-0 என்ற கோல்கணக்கில் அஸ்டன் வில்லாவையும், பௌர்ண்மௌத், 2-1 என்ற கோல்கணக்கில் கிறிஸ்டல் பலஸையும் தோற்கடித்ததோடு, வெஸ்ட் புரோம், சுவான்சீ அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .