2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

சந்தேகத்தில் சிடில்; முன்னேறுகிறார் டெய்லர்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகின்ற நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை (20), கிறிஸ்சேர்ச்சில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பீற்றர் சிடில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டனில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இனிங்ஸில் முதுகுப் பகுதியில் உபாதைக்குள்ளாகிய சிடில், எதிர்வரும் நாட்களில் நன்றாக பந்துவீசி, தனது உடற்றகுதியை தேர்வாளர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டரன் லீமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் சிடில் பங்கேற்காதபட்சத்தில், காயத்திலிருந்து குணமடைந்து, விளையாடும் தகுதியை நெருங்கி வரும் இன்னொரு வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் பற்றின்சன் விளையாடும் பதினொருவர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, காயத்திலிருந்து குணமடைந்து வரும் நியூசிலாந்து அணியின் சிரேஷ்ட வீரர் றொஸ் டெய்லர், எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐலண்ட் ஒஃப் ஒறிஜின் இருபதுக்கு-20 போட்டியில் பங்கேற்கவுள்ளார். உலக இருபதுக்கு-20 கிண்ணத்துக்காக நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு பயணிக்கவுள்ள வேளையில், இப்போட்டியானது பயிற்சிப் போட்டியாக கருதப்படுகிறது.

பாகிஸ்தானுடனான இருபதுக்கு-20 சர்வதேசத் தொடரில், இடது பக்கத்தில் ஏற்பட்ட தசைக் கிழிவு காரணமாக, அதன் பின்னரான பாகிஸ்தானுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், அவுஸ்திரேலியாவுக்கெதிரான சப்பல்-ஹட்லி கிண்ணம், அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் டெய்லர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .