2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது சிட்னி தண்டர்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 24 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவந்த பிக் பாஷ் லீக் தொடரின் சம்பியன்களாக, சிட்னி தண்டர் அணி தெரிவாகியுள்ளது. மெல்பேண் ஸ்டார்ஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, அவ்வணி சம்பியன் பட்டத்தை வென்றது.

சிட்னி தண்டர் அணிக்கு மைக் ஹஸியும் மெல்பேண் ஸ்டார்ஸ் அணிக்கு அவரது சகோதரரான டேவிட் ஹஸியும் தலைமை தாங்கிய இப்போட்டி, சகோதரர்களுக்கிடையிலான மோதலாக அமைந்தது. அத்தோடு, அவுஸ்திரேலிய மண்ணில் மைக் ஹஸி விளையாடும் இறுதிப் போட்டியாகவும் இது அமைந்தது.

மெல்பேண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி தண்டர் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பேண் ஸ்டார்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. தனது முதலாவது விக்கெட்டை 6 ஓட்டங்களுக்கே இழந்த ஸ்டார்ஸ் அணி, இரண்டாவது விக்கெட்டுக்காக லூக் ரைட், கெவின் பீற்றர்சன் இணைந்து பகிர்ந்த 44 ஓட்டங்களின் துணையுடன், பலமான நிலையில் காணப்பட்டது.

துடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கெவின் பீற்றர்சன், 39 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 74 ஓட்டங்களைக் குவித்தார். லூக் ரைட் 23, டேவிட் ஹஸி 21 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷேன் வொற்சன், கிறிஸ் கிறீன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் அணி, 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டுக்காக ஜக்ஸ் கலிஸ், உஸ்மான் கவாஜா இருவரும் 9.1 ஓவர்களில் 86 ஓட்டங்களைப் பகிர, சிட்னி தண்டர் அணிக்குப் பலமாக அடித்தளம் கிடைத்தது.

துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா, 40 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 70 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, ஜக்ஸ் கலிஸ் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் 3, அடம் ஸம்பா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக உஸ்மான் கவாஜா தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .