Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில், ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட், ஜெர்மனியக் கால்பந்தாட்டக் கழகமான பெயார்ண் முனிச் ஆகிவற்றுக்கிடையே அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட் வெற்றி பெற்றுள்ளது.
மேற்படி போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை சாவூல் நிறே பெற்றிருந்தார். கோல்கம்பத்திலிருந்து 35 யார் தூரத்தில் பந்தைப் பெற்ற சாவூல் நிறே, பெயார்ண் முனிச்சின் பின்கள வீரர்களான ஸ்கெபி அலோன்ஸோ, தியாகோ அல்கன்டறா, ஜுவான் பெர்னட்டின் தடைகளைத் தகர்த்தே போட்டியின் 11ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்றிருந்தார்.
போட்டியின் இரண்டாவது பாதியில் பெயார்ண் முனிச் ஆதிக்கம் செலுத்தியபோதும் 35 யார் தூரத்திலிருந்து டேவிட் அலபா அடித்த பந்து கோல்கம்பத்திலையே பட்டதுடன் ஆர்டுரோ விடல் அடித்த பந்து தடுக்கப்பட்டிருந்தது. இரண்டாவது பாதியில் அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக பெர்னாண்டோ டோரஸ் மட்டுமே ஒரேயொரு முறை கோல் போட முயன்றிருந்தார்.
மேற்படி போட்டியில், அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் பிரதான பின்கள வீரர் டியகோ கோலான் காயம் காரணமாக பங்கேற்காத நிலையிலும் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அத்லெட்டிகோ மட்ரிட், எதிர்வரும் புதன்கிழமை (04), பெயார்ண் முனிச் அணியின் மைதானத்தில் இடம்பெறவுள்ள இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டிக்கு ஒரு கோல் முன்னிலையுடன் செல்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .