Shanmugan Murugavel / 2016 மே 05 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரினை 10 தடவைகள் வென்றுள்ள ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட், 14ஆவது தடவையாக தற்போது இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
றியல் மட்ரிட்டுக்கும் இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றிக்குமிடையே றியல் மட்ரிட் அணியின் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றமையினையடுத்தே அவ்வணி சம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியின் 20ஆவது டனி கர்வகாலிடமிருந்து பந்தைப் பெற்ற கரித் பேல், கோல்கம்பத்தினை நோக்கி பந்தை உதைத்தபோது, அது மன்செஸ்டர் சிற்றியின் பெர்னாண்டோவின் காலில் பட்டு ‘ஒவ்ண்’ கோலாக மாறியதே போட்டியில் பெறப்பட்ட கோலாகும்.
மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில், காயத்திலிருந்து குணமடைந்து மீண்ட றியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றிருந்த நிலையில், மற்றுமொரு நட்சத்திர வீரரான கரித் பேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அதிரடியான தாக்குதல் ஆட்டத்தை றியல் மட்ரிட் முன்னெடுத்திருந்தது. எவ்வாறெனினும் மற்றுமொரு நட்சத்திர வீரரான கரிம் பென்ஸீமாவும் கஸ்மெய்ரோவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கெடுத்திருக்கவில்லை.
றியல் மட்ரிட்டின் தாக்குதல் ஆட்டத்துக்கு, மன்செஸ்டர் சிற்றியின் மத்திய பின்கள வீரரும் அணித்தலைவருமான வின்சென்ட் கொம்பனி, ஆட்டம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களில் வெளியேறியமையும் கைகொடுத்திருந்ததுடன் மன்செஸ்டர் சிற்றியின் நட்சத்திர வீரர் டேவிட் சில்வா காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்றிருக்காததுடன் காயத்திலிருந்து மீண்ட யாய தூரே பிரகாசித்திருக்கவில்லை.
மன்செஸ்டர் சிற்றி சார்பாக பெர்னாண்டின்ஹோ அடித்த பந்து ஒன்று கோல்கம்பத்தில் பட்டுத் திரும்பியதே அவ்வணிக்கு கிடைக்கப் பெற்ற ஒரேயொரு வாய்ப்பு ஆகும்.
ஆனால், றியல் மட்ரிட் அணியின் கரித் பேல் அடித்த பந்து, கோல்கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிக் ஆகியோரின் கோல் பெறும் வாய்ப்புகளை மன்செஸ்டர் சிற்றியின் கோல்காப்பாளர் ஜோ ஹார்ட் தடுத்திருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக றியல் மட்ரிட் அணியின் மத்தியகள வீரரான டொனி க்ரூஸ் தெரிவாகியிருந்தார். மேற்படி போட்டியில், சக அணி வீரர்களை விட அதிக தடவைகள் பந்தைத் தொட்டிருந்ததுடன் அதிக தடவைகள் பந்தைப் பரிமாற்றியதுடன் அதிக தடவைகள் எதிரணியிடமிருந்து பந்தை மீட்டெடுத்திருந்தார்.
நான்கு மாதங்களுக்கு முதலே றியல் மட்ரிட்டின் பயிற்சியாளராக பதவியேற்ற அவ்வணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஸினேடி ஸிடான், தனது முதலாவது பருவகாலத்திலேயே சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு தனது அணியை அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி இத்தாலியின் மிலான் நகரத்திலுள்ள சான் சிரோவில் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தனது சக நகர கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டை றியல் மட்ரிட் எதிர்கொள்ளவுள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026