2025 ஜூலை 05, சனிக்கிழமை

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரராக மெஸ்ஸி

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் மிலானில் இன்று அதிகாலை நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன விருதுகள் வழங்கும் விழாவில், ஆண்டின் சிறந்த வீரராக ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான லியனல் மெஸ்ஸி தெரிவானார்.

அந்தவகையில், 2009, 2010, 2011, 2012, 2015ஆம் ஆண்டுகளிலும் சிறந்த வீரராக பார்சிலோனாவின் அணித்தலைவர் மெஸ்ஸி தெரிவாகியிருந்த நிலையில், தற்போது ஆறாவது தடவையாக சிறந்த வீரராகத் தெரிவாகி, அதிக தடவைகள் இந்த விருதை வென்றவராகியுள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் பின்களவீரரான வேர்ஜில் வான் டிஜிக், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஆகியோரைத் தாண்டியே இவ்விருதை இம்முறை ஆர்ஜென்டீனா சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரான மெஸ்ஸி வென்ற நிலையில், மெஸ்ஸிக்கு அடுத்ததாக போர்த்துக்கல் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இவ்விருதை ஐந்து தடவைகள் வென்றுள்ளார்.

ஆர்ஜென்டீனா சர்வதேச கால்பந்தாட்ட அணியினது தலைவரான மெஸ்ஸி, கடந்த பருவகாலத்தில் 51 கோல்களைப் பெற்றதோடு, 22 கோல்களைப் பெற உதவியிருந்த நிலையில், கடந்த பருவகாலத்தில் பார்சிலோனா லா லிகா சம்பியன்களானதுடன், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது.

இறுதி வாக்கெடுப்பில், 46 புள்ளிகளை மெஸ்ஸி பெற்றிருந்த நிலையில், நெதர்லாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் பின்களவீரரான வேர்ஜில் வான் டிஜிக் 38 புள்ளிகளையும், போர்த்துக்கல் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 36 புள்ளிகளையும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன், பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகனைத் தாண்டி சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை லிவர்பூல் மற்றும் பிரேஸில் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளரான அலிஸன் வென்றிருந்தார்.

இதேவேளை, ஆண்டின் சிறந்த ஆண்களின் பயிற்சியாளருக்கான விருதை, மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளர் பெப் குவார்டிலோ, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் முகாமையாளர் மெளரிசியோ பொச்செட்டினோவைத் தாண்டி லிவர்பூலின் முகாமையாளர் ஜுர்ஜன் க்ளொப் தெரிவாகியிருந்தார். சம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூல் சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவ்வாண்டின் ஆண்களின் அணி பின்வருமாறு,

லியனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிலியான் மப்பே, லூகா மோட்ரிட்ச், பிரங்கி டி ஜொங், ஈடின் ஹஸார்ட், மத்தியாஸ் டி லிஜிட், சேர்ஜியோ றாமோஸ், வேர்ஜில் வான் டிஜிக், மார்ஷெலோ, அலிஸன்.

இதேவேளை, ஆண்டின் சிறந்த வீராங்கனையாக சக ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்ட அணியின் முன்களவீராங்கனையான அலெக்ஸ் மோர்கன், இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் பின்களவீராங்கனை லூசி ப்ரோன்ஸ் ஆகியோரைத் தாண்டி, ஐக்கிய அமெரிக்க சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்களவீராங்கனையான மேகன் றபினோ தெரிவானார்.

பெண்களுக்கான இவ்வாண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் ஐக்கிய அமெரிக்கா சம்பியனாவதற்கு உதவியிருந்த ஐக்கிய அமெரிக்க சர்வதேச கால்பந்தாட்ட அணியின் இணைத் தலைவியான றபினோ, அந்த உலகக் கிண்ணத்தின் சிறந்த வீராங்கனைக்கான தங்கப் பந்தையும், அதிக கோல்களைப் பெற்றவர்களுக்கான தங்கப் பாதணி விருதையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பெண்களின் பயிற்சியாளருக்கான விருதை நெதர்லாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் சரினா வைக்மன், இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் பில் நெவில்லி ஆகியோரைத் தாண்டி ஐக்கிய அமெரிக்க சர்வதேச கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் ஜில் எல்லிஸ் தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .