2025 ஜூலை 05, சனிக்கிழமை

சீரி ஏ: மிலன்களின் மோதலில் ஏ.சியை வீழ்த்தியது இன்டர்

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பரம வைரிக் கழகங்களாக இன்டர் மிலன், ஏ.சி மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணிகளுக்கிடையேயான போட்டியில் இன்டர் மிலன் வென்றது.

இப்போட்டியின் முதல் பாதியில் கோலெதுவும் பெறப்படாமல் 0-0 என்ற கோல் கணக்கில் காணப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது பாதியின் நான்காவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் ஸ்டெஃபனோ சென்சியின் பிறீ கிக்கானது இன்னொரு மத்தியகளவீரரான மார்ஷெலோ பிரொஸ்னோவிச்சிடம் சென்றிருந்த நிலையில், அவரின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது ஏ.சி மிலனின் முன்களவீரர் ரஃபேல் லியோவில் பட்டு கோலான நிலையில் இன்டர் மிலன் முன்னிலை பெற்றிருந்தது.

இக்கோலின்போது இன்டர் மிலனின் முன்களவீரர் லோட்டரோ மார்ட்டின்ஸ் ஓஃப் சைட்டில் இருந்தார் என உதவி மத்தியஸ்தர் கொடியைக் காண்பித்திருந்தபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் மீளாய்வில் அவர் விளையாட்டில் தடையேற்படுத்தவில்லை என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக போட்டியின் 23ஆவது நிமிடத்தில் ஏ.சி மிலனின் மத்தியகளவீரர் ஹகன் கல்ஹனொக்லு பெற்ற கோலானது, அவரின் சக மத்தியகளவீரர் ஃபிராங் கெஸி பந்தைத் தொட்டமை காரணமாக காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பால் நிராகரிக்கப்பட்டிருந்ததோடு, இன்டர் மிலனின் மத்தியகளவீரர் டனிலோ டி அம்புரோசியோ தலைக்கு மேல் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதை தடுக்கப்பட்டு வந்த நிலையில் லோட்டரோ மார்ட்டின்ஸ் கோலாக்கியபோதும் அது ஓஃப் சைட் என நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போட்டியின் 78ஆவது நிமிடத்தில் சக மத்தியகளவீரரான நிக்கொலோ பரெல்லாவிடமிருந்து வந்த பந்தை இன்டர் மிலனின் முன்களவீரர் றொமேலு லுக்காக்கு தலையால் முட்டிக் கோலாக்கியதோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ஹெலாஸ் வெரோனாவுடனான போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றிருந்தது. ஜுவென்டஸ் சார்பாக, ஆரோன் றம்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஹெலாஸ் வெரோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை மிக்கேல் வெலோசோ பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .