2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 மே 10 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த பாகிஸ்தான், ஹராரேயில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் இனிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களால் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், அபிட் அலியின் ஆட்டமிழக்காத 215, அஸார் அலியின் 126, நெளமன் அலியின் 97 ஓட்டங்களோடு, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 510 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் பெற்றபோது, இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், பிளஸிங் முஸர்பனி 3, தென்டாய் சிஸோரோ 2, றிச்சர்ட் நகரவா, டொனால்ட் ட்ரிபானோ, லுக் ஜொங்வி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, ஹஸன் அலியிடம் 5, சஜிட் கானிடம் 2, அறிமுக வீரர் தபிஷ் கானிடம் 1, ஷகீன் ஷா அஃப்ரியிடம் 1 விக்கெட்டைப் பறிகொடுத்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், றெஜிஸ் சகப்வா 33, ட்ரிபானோ 23 ஓட்டங்களைப் பெற்றனர்.

இந்நிலையில், பொலோ ஒன் முறையில் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே சார்பாக, சகப்வா 80, அணித்தலைவர் பிரெண்டன் டெய்லர் 49, ஜொங்வி 37 ஓட்டங்களைப் பெற்றபோதும், நெளமன் அலி, ஷகீன் ஷா அஃப்ரியிடம் தலா 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்று இனிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக அபிட் அலியும், தொடரின் நாயகனாக ஹஸன் அலியும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .