2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தங்கம் வென்ற தாய்மார் ஃபிறேஸர்-பிறைஸ், பீலிக்ஸ்

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரின் தலைநகர் டோஹாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த தடகளச் சம்மேளனங்களின் சர்வதேச சங்கத்தின் உலக தடகள சம்பியன்ஷிப்பில் நேற்று தடகளத்துக்குத் திரும்பிய தாய்மார்கள் ஒளிர்ந்த நிலையில், தனது நான்காவது 100 மீற்றர் தங்கப் பதக்கத்தை ஜமைக்காவின் ஷெலி-ஆன் ஃபிறேஸர் பிறைஸ் பெற்றதுடன், உசைன் போல்டின் தங்கப் பதக்க சாதனையை ஐக்கிய அமெரிக்காவின் அலிஸன் பீலிக்ஸ் முறியடித்திருந்தார்.

பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட பின்னர் தத்தமது முதலாவது உலக தடகள சம்பியன்ஷிப்பில் ஷெல்லி-ஆன் ஃபிறேஸர்-பிறைஸ், அலிஸன் பீலிக்ஸ் பங்கேற்றிருந்த நிலையில், 10.71 செக்கன்களின் 100 மீற்றர் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றிருந்தார். தனது முதலாவது குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக 2017ஆம் ஆண்டு உலக தடகள சம்பியன்ஷிப்பை 32 வயதான ஷெலி-ஆன் ஃபிறேஸர் பிறைஸ் தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 100 மீற்றர் தூரத்தை 10.83 செக்கன்களில் கடந்த பிரித்தானியாவின் டினா ஆஷர்-ஸ்மித் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்ததோடு, 10.90 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த ஐவரிகோஸ்டின் மேரி-ஜொஸே தா லெள மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.

இப்போட்டியின் ஆரம்பத்திலிருந்து ஷெலி-ஆன் ஃபிறேஸர் பிறைஸ் எல்லைக்கோட்டிலிருந்து பந்தயத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து ஆரம்பத்திலேயே வேகமாக ஓடி முதல் 20 மீற்றர்களிலேயே முன்னிலையைப் பெற்றிருந்தார்.

அந்தவகையில், 2009, 2013, 2015ஆம் ஆண்டு உலக தடகள சம்பியன்ஷிப்களில் 100 மீற்றரில் தங்கப் பதக்கத்தைப் பெற்றதுடன் தற்போது நான்காவது தங்கப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், 4x400 மீற்றர் கலப்பு அஞ்சலில் மூன்று நிமிடங்கள் 9.34 செக்கன்களில் சாதனை நேரத்தில் ஐக்கிய அமெரிக்கா முதலாமிடத்தைப் பெற்றிருந்த நிலையில் 33 வயதான அலிஸன் பீலிக்ஸ், தனது 12ஆவது உலக தடகள தங்கப் பதக்கத்தைப் பெற்று, ஜமைக்காவின் உசைன் போல்டின் 11 உலக தடகள சம்பியன்ஷிப் தங்கங்கள் என்ற சாதனையை முறியடித்திருந்தார்.

அந்தவகையில், 200 மீற்றர்களில் மூன்று தங்கப் பதக்கங்கள், 400 மீற்றரில் ஒரு தங்கப் பதக்கம், 4x100 மீற்றர் அஞ்சலில் மூன்று தங்கப் பதக்கங்கள், 4x400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் நான்கு தங்கப் பதக்கங்கள் என முன்னர் 11 தங்கப் பதக்கங்களை அலிஸன் பீலிக்ஸ் வென்றிருந்தார்.

இதேவேளை, 100 மீற்றரில் நேற்று முன்தினம் தங்கப் பதக்கம் வென்றிருந்த ஐக்கிய அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மன், நேற்று இடம்பெறவிருந்த 200 மீற்றருக்கான ஆரம்ப சுற்றில் களைப்புக் காரணமாக விலகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .