2025 ஜூலை 24, வியாழக்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 03 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சிட்னியில் இன்று நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆரம்பத்திலேயே மொஹமட் றிஸ்வானை வெய்ன் பார்னலிடம் இழந்தது. இதையடுத்து வந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மொஹமட் ஹரிஸையும் 28 (11) ஓட்டங்களோடு அன்றிச் நொர்கியாவிடம் இழந்த பாகிஸ்தான், அஸாம் மற்றும் ஷண் மசூட்டையும் லுங்கி என்கிடி, நொர்கியாவிடம் இழந்தது.

இதைத் தொடர்ந்து இஃப்திஹார் அஹ்மட், மொஹமட் நவாஸ் ஆகியோர் இனிங்ஸை நகர்த்திய நிலையில் 28 (22) ஓட்டங்களோடு தப்ரையாஸ் ஷம்சியிடம் நவாஸ் வீழ்ந்தார். பின்னர் வந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷடாப் கான் 52 (22) ஓட்டங்களோடு நொர்கியாவிடம் வீழ்ந்ததோடு, அடுத்த பந்திலேயே நொர்கியாவிடம் மொஹமட் வாஸிம் வீழ்ந்திருந்தார்.

இறுதி ஓவரில் முதற் பந்தில் 51 (35) ஓட்டங்களோடு மொஹமட்டும் ககிஸோ றபாடாவிடம் வீழ்ந்த நிலையில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது.

பதிலுக்கு 186 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, ஆரம்பத்திலேயே குயின்டன் டி கொக், றீலி றொஸோவை ஷகீன் ஷா அஃப்ரிடியிடம் இழந்தது. தொடர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் தெம்பா பவுமா 36 (19) ஓட்டங்களுடன் ஷடாப் கானுடன் வீழ்ந்ததோடு, அதே ஓவரிலேயே ஏய்டன் மார்க்ரமும் 20 (14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.

இந்நிலையில், ஒன்பது ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களை தென்னாபிரிக்கா பெற்றபோது மழை குறுக்கிட்டது. அந்தவகையில் தென்னாபிரிக்க அணியின் இனிங்ஸானது 14 ஓவராகக் குறைக்கப்பட்ட நிலையில் 142 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், அஃப்ரிடி, மொஹமட் வஸிம், நசீம் ஷா, ஹரிஸ் றாஃப்பிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த தென்னாபிரிக்கா, 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களையே பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக கான் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .