Shanmugan Murugavel / 2016 மே 11 , மு.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணிக்கும் எசெக்ஸ் அணிக்குமிடையிலான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி, எசெக்ஸ் அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் வெற்றி - தோல்வியின்றி முடிவடைந்த போதிலும், இலங்கை அணி மீது நம்பிக்கையுடன் இருப்பதான கருத்துகளை, அவ்வணியின் பயிற்றுநர் கிரஹாம் போர்ட் தெரிவித்துள்ளார்.
தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய பாடசாலை மாணவனொருவனுக்கு, 4 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, பந்துவீச்சிலும் தடுமாறியிருந்தது. அதைவிட, இலங்கை அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத்தின் உபாதையும், இலங்கைக்கு அதிக கவலையை வழங்கியுள்ளது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள போர்ட், கிடைத்த நேரத்தில் சிறப்பாகச் செயற்பட்டிருக்கலாம் என ஏற்றுக் கொண்டார். எனினும், கள நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாறுவதற்கு இன்னும் காலமெடுக்கும் எனத் தெரிவித்த அவர், ஒன்றிரண்டு துடுப்பாட்ட வீரர்கள், சிறந்த போர்மை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
எனினும், ஸ்விங் செய்யும் பந்துகளைச் சிறப்பாக விளையாடுவதற்கு, இன்னமும் கடுமையாகப் பயில வேண்டுமெனத் தெரிவித்த அவர், பந்துவீச்சில் சிறப்பாக ஆரம்பிக்காவிட்டாலும், பின்னர் முன்னேற்றமடைந்ததாகவும் தெரிவித்தார். அத்தோடு, பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடியதையடுத்து, வீரர்களின் திறமையில் முன்னேற்றமேற்படுமெனவும் போர்ட் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, தோட்பட்டைக் காயத்துக்குள்ளான தம்மிக்க பிரசாத்தின் காயம் தொடர்பான ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில், தெளிவான பிரச்சினை புலப்படாத போதிலும், அடுத்த பயிற்சிப் போட்டியில் அவர் பங்குபெற மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .