2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துக்கு எதிராக போராடும் இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 20 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ஆரம்பமான சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா போராடி வருகிறது.

இப்போட்டியின் முதல் நாளில் மழை, மைதான ஈரலிப்பு காரணமாக ஆட்டம் எதுவும் இடம்பெறாத நிலையில், நேற்று நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், தமதணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

இந்தியாவானது இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியிருந்தது.

மறுபக்கமாக, எந்தவொரு சுழற்பந்துவீச்சாளரும் இல்லாமல், ட்ரெண்ட் போல்ட், டிம் செளதி, நீல் வக்னர், கைல் ஜேமிஸன், கொலின் டி கிரான்ட்ஹொம் என ஐந்து வேகப்பந்துவீச்சாளர்களுடன் நியூசிலாந்து களமிறங்கியிருந்தது.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா, ரோஹித் ஷர்மாவின் 34, ஷுப்மன் கில்லின் 28 ஓட்டங்களுடன் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது.

எனினும், பின்னர் ஷர்மா, கில்லை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஜேமிஸன், வக்னரிடம் இழந்தது. அடுத்து வந்த செட்டேஸ்வர் புஜாராவும், அணித்தலைவர் விராட் கோலியும் நிதானத்தைக் கடைப்பிடித்தனர்.

பின்னர் போல்டிடம் புஜாரா வீழ்ந்ததைத் தொடர்ந்து கோலி, அஜின்கியா ரஹானேயின் இணைப்பாட்டத்தில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமானது போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், 3 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் இந்தியா பெற்றுள்ளது.

தற்போது களத்தில், கோலி 44, ரஹானே 29 ஓட்டங்களுடன் களத்திலுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X